Thursday, 4 February 2016

மாசி



ஏழடி நடந்து வந்தே ஏந்துவர் ஏடுடையாரை
ஆறடி கிடந்துவந்தே ஆற்றுவர் கருமந்தனை
ஐந்தடி தள்ளி நின்றே அஞ்சுவர் ஆடவர்தாம்
நாவடி நயந்த சொல்லில் நடுங்குவர் பகைவராவர்
மூவடி உல களந்தே முகுந்தனும் வாமனனாய்
ஈரடி தமிழால் உலகை ஈரத்தவன் வள்ளுவனார்
ஓரடி பாதம் ஊன்றி ஓங்கார நடனம் செய்வான் 
சீரடி போற்றுவோர்தம் அடியின்கீழ் பொடியேனே.
- ஜோதி. 04/02/2016

போதிமரம் தந்ததொரு போதனையால் 
வேதிமதம் வெந்ததொரு வேதனையால்
சாதிமதம் சரிந்ததொரு சாதனைதான்
மீதிமனம் மாறாததொரு வேதனைதான். - ஜோதி. 05/02/2015


                                              சிவனும் சீவனும் ஒன்றே ஆகும்.
                                                 சீவன் போகும் சிவனே ஆகும்.

வாழ்க்கை என்னும் ஓடம் 
வழங்குகின்ற பாடம் 
மானிடனின் மனதினிலே
மறக்கவொன்னா வேதம்.



கவிப்பேரரசு வைரமுத்துவின் மீது ஒரு ஈழ தமிழன் குற்றம்சாட்டுகிறார் இது காலம் கடந்த செயல் என்று. 

பாருங்கள் காணொளியை பகிருங்கள் — நன்றி
அந்த ஈழத் தமிழன் நான் என்ற வகையில் இன்னுமொரு கவிதை போர். -ஜோதி.

கவிப்பேரரசின் கவிதை வரிகளும்
ஒரு ஈழத் தமிழனின் தார்மீக வலிகளும்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

முள்ளிவாய்க்கால் போயிருந்தேன் - அந்த
முல்லைத்தீவையும் மோதிவந்தேன்.
முள்ளில் கிழிந்த என் கண்களிலே - நீர் 
முட்டித்தெறித்ததை யாரறிவார். (வை)

முள்ளில் கிழிந்த உன் கண்களிலே - செங் 
குருதி கூடவா வரவில்லை?
முட்டித்தெறித்தது நீர் என்றால் - அதைப்
பற்றிக் கவிதை படைத்தென்ன?

ஆனந்தபுரத்தைக் கடக்கையிலே - என் 
ஆவி துடித்ததை என்னசொல்ல.
நானந்தத்துயரம் சொல்வதற்கு - என்
நாபடும்பாடு கொஞ்சமல்ல. (வை)

கோபாலபுரத்தில் கிடக்கையிலே - ஈழ
ஆவி துடித்தது தெரியலையோ
நீயந்தத்துயரம் சொல்வதற்கு - உன் 
கைபெற்ற கூலி கொஞ்சமல்ல.

இந்த இடம்தான் அந்த இடம் - எம்
லட்சம் உயிர்களைக்கொன்ற இடம்.
சொந்தம் சொல்லி நானழுதால் - விண்சுற்றும்
கோள்கள் நின்றுவிடும். (வை)

அந்த இடந்தான் நம்சொந்த இடம் - நம் 
மண்ணின் மைந்தர் வீழ்ந்த இடம் 
சொந்தம் சொல்லி நீயழுதால் - விண்சுற்றும்
கோள்கள் சிரித்துவிடும்.

சாகாத காற்றின் சத்தங்களில் - எம்
சனங்களின் அழுகுரல் கேட்டறிந்தேன்.
ஆகாயம் எரித்த சாம்பல் துகள் - மண்ணில் 
அங்கங்கலைவதைக் கண்டறிந்தேன். (வை)

சாகாத காற்றின் சத்தங்களில் - நம் 
சரித்திர எழுகுரல் கேட்டுலகம்
ஆகாயம் எங்கும் எதிரொலிக்க - நந்திச்
சமுத்திர அலைகளைக் கண்டறி நீ.

எரிவாய் பட்ட சருகுகளாய் - உடல்
இற்றுப்போனவர் எத்தனையோ.
நரிவாய் பட்ட நண்டுகளாய் - இங்கு
நசுங்கிய சிசுக்கள் எத்தனையோ. (வை)

எரிவாய் பட்டும் சருகுகளாய் - மண்ணுக்கு
எருவாய் போனவர் தான்
நரிவாய் பட்ட நண்டுகளாய் - உன்மண்ணில்
அகதியாய் அலைந்தவர் தான்.

தாயிடம் பால் கொண்ட பிள்ளையரை - ஒரு
தடயம் இன்றியே எரித்தாராம்.
ஆயிரம் எலும்புக்கூடுகளைச் - சீன
அமிலம் ஊற்றியே அழித்தாராம்.
படர்ந்து கிடக்கும் வெறுமையிலே - இனம்
பட்ட துயரம் சில அறிவோம். (வை)

தாயிடம் பாலுண்ணும் பிள்ளைகளை - தமிழ் 
நாட்டிலே பிச்சைக்கு அலையவைத்தார்
ஆயிரம் கனவோடு வந்தவரை - அங்கு
அகதிகள் முகாமிலே தங்கவைத்தார்
அடிப்படை கல்வியில் முன்னேறி - அவர் 
அடுத்தடி எடுப்பதைத் தடுத்து வைத்தார்.

தோண்டுமிடத்தில் தங்கம் வரும் - என்று
சொல்லிக்களித்த ஈழத்தில் 
தோண்டும் இடத்தில் குருதிவரும் - என்று
சொல்லிப்புலம்பும் நிலையுற்றோம். (வை)

வேண்டும் இடத்தில் வேடம் இடும் - இந்த
வேடிக்கை உமக்குப் புதியதில்லை
தோண்டும் இடத்தில பணம் வருமேல் - உறவை
தோண்டி எடுத்து கவிபாடு.

மைதீட்டிச் செய்த நிறம்படைத்த - பல
மங்கையர் கூந்தலில் பூவுமில்லை.
கைநீட்டிப் பார்த்தேன் தோழர்களே - சில
கரங்களுமில்லைக் கை குலுக்க. (வை)

மைதீட்டி நிறம் படைக்கும் கூந்தல் - நம் 
மங்கையர் மறந்து நாளாச்சு
கைநீட்டிப் பார்த்தாய் சில்லறைக்கு - சிலர் 
கரண்சியுமில்லை கை குலுக்க.

மண்ணில்விழுந்த மழைத்துளிகள் - அவை 
மண்ணில் தொலைந்துபோவதில்லை.
எண்ணிலடங்கா உயிர்த்தியாகம் - வெறும் 
இறப்புக்கணக்கில் சேர்வதில்லை.
அழிந்துபோனது போலிருக்கும் - ஆயின்
அறுகம்புல்லுக்கு அழிவேது. (வை)

இந்த வரிகள் வைரவரி உன் நெஞ்சில் 
எழுந்த இரங்கல் வரி - வெறும் 
ஐந்துக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டு
பாடவந்தவன் நீயல்ல - உன் 
தமிழையும் புலமையும் உலகறியும் - அதை
தலைவணங்காதவன் தமிழன் இல்லை.

பொழியும் ஒருதுளி பட்டவுடன் - அது
பொட்டென்று எழுமே அழியாது.
எந்த யுகத்தில் போர்களில்லை - அட
எந்த யுகத்தில் தோல்வியில்லை.
அந்த யுகத்தை எருவாக்கு - நீ
அடுத்த யுகத்தை உருவாக்கு! (வை)

பொழியும் தமிழ்கவி பட்டவுடன் -அதில்
பொட்டென்று எழுந்தது என் பாட்டு
பொறுமும் எங்கள் மனக்குறையை
போட்டு உடைத்தது புவிகாண - ஒரு
தருமம் உண்டு நம் தவிப்பில் - சற்று 
தனியே நின்று நீ யோசி. - ஜோதி.

- வைரமுத்து

No comments:

Post a Comment