ஆலமரமொன்று அடிபெயர்ந்து வீழந்ததென்று
செய்தி வந்ததின்று செய்வதொன்று நானறியேன்
வாழப் பிறந்தோரெல்லாம் சாவதே உண்மையிங்கு
அந்த சாதலும் - நோதலும் எல்லாமே கங்கார்ப்பணம்.
ஊருக்குள் புகழ் பரப்பி உறவுக்கு நிழல் பரப்பி
பாருக்குப் பலவுணர்த்தி பயனோடு வாழ்ந்த மரம்
நேருக்கு நேரெதையும் நறுக்காகக் கேட்டாலும்
யாருக்கும் மனம் நோகா நானறிந்த சின்னமாமி.
காலத்தால் முதிர்ந்த மரம் ஞானத்தால் கனிந்த பழம்
கோலத்தால் ஞானப் பழம் கொள்கையில் லோகமயம்
சீலத்தால் உயர்ந்த குணம் சிந்தையில் சிவமயமே
ஞாலத்தில் நல்ல மனம் நானறிந்த சின்னமாமி.
தந்தையோடு தாயிழந்து தமையனோடு வாழ்ந்திருந்து
வந்தமண வாழ்விழந்து பெற்ற மகள் தானிழந்து
உற்றதொரு சோதரியை உடன் பிறந்த சோதரனை
பெற்ற மகன் தனையும் பேர்பெற்ற மருகனையும்
இத்தரையில் போகவிட்டு சித்தம் தெளிவு பெற்றாய்
வித்தகங்கள் பேசிவீண் விவாதங்கள் செய்ததில்லை
சித்தரைப்போல் வாழந்திருந்தாய் சிவனையே நினைந்திருந்தாய்
பத்தரைமாற்றுத் தங்கமவள் நானறிந்த சின்னமாமி.
உண்மை பலவுணர்த்தி உவமானக் கதைகள் கூறி
வெள்ளை மணங்காட்டி வேடிக்கையாய் சிரித்திடுவாய்
சித்தர் பாடல்களும் சிவஞான போதனையும்
உத்தமியே உன்வாயக்குத் தித்திக்கும் தேன்பாகு.
திருகோணமலை பெற்ற தெய்வீக பெருந் தாயே
ஒருக்காலுமுன் திருக்கோலம் எம்சிந்தைவிட்டகலாது
இக்காலமட்டுமல்ல எக்காலமும் எம் மனத்திலே
பொற்காலமாக வாழ்வாள் நானறிந்த சின்னமாமி.
சின்னமாமி என்றால் சிந்தைக்குள் சிங்கார பூ பூக்கும்
எண்ணமெலாமினிக்கும் எம்மனமோ நிறைந்திருக்கும்
உம்மைப் பிரிந்தோமென்ற உணரவில்லை எமக்கிங்கு
எந்தை - தாய் - குருவோடு நீயும் ஓர் தெயவமாமே!!!
தோற்றம் : 23/01/1901. ஏற்றம் : 21/03/1992
எனது தந்தையாரின் இளைய சகோதரியின் மறைவில்
என் மனதில் மலர்ந்த கவிதாஞ்சலி. அக்கால கட்டத்தில்
என் நாட்குறிப்பை "கங்கார்ப்பணம்" எனும் தலைப்பில்
எழுதி வந்தேன்.



No comments:
Post a Comment