Wednesday, 16 September 2015

மேற்கோள்


இயற்கை அன்னையோடு
இருகரங் கோர்த்துநட
அதுஉன் மனதை உடலை
ஆன்மாவை இயக்கும்
அரும் சக்த்தி.


வாழ்கை எங்கே
போகிறோம் என்பதல்ல
யாருடன் பயணிக்கின்றோம்
என்பதே.










Monday, 14 September 2015

சாந்தகுமார் ஓவியம்



தொடர்மலை போலொரு உறவுகளாலே
அமைந்திடும் மானுடன் வாழ்வு அதில்
ஏற்றமும் உண்டு இறக்கமும் உண்டென
ஏற்பதே மானுடன் வாழ்வு.


இருகரை மீதெழும் இயற்கைக்கள்வாழ
நடந்திடும் நதியின் போக்கு அதுபோல்
ஒருவரை ஒருவர் வாழ்த்திடவாழும்
நிலையது மானுடன் போக்கு.


நதிக்கரை நாணல்போல் வளைந்திடவாழல்
மதியுறை மாந்தர்கள் வாழ்வாம் அன்றேல்
நதிநீர் வெள்ளத்தில் புரண்டிடும் மரமென
மதியுரை மாந்தர்கள் சொல்லாம்.


அலைகடல் மீதொரு ஓடம் போலே
அலைந்திடும் மானுடன் வாழ்வு அது
கரைதொடும் போல்வரும் அமைதியைப்போல
அமைந்திடும் மானுடன் மரணம்.

ஒளிச்சித்திரம் : சாந்தகுமார் 

உரைச்சித்திரம் : ஜோதி



தனிக்குன்றென உயர்ந்தும் குளிர்தருபசுமை
இன்றெனில் அதுவோர் பாறை அதுபோல்
மணிக்குன்றென செல்வம் படைத்தவன் கஞ்சன்
என்றெனில் அவனோர் பாறை.



கருநீலக்கடலோடு செவ்வானம் முட்டும் 
தொடுவானந் தொடுவதுபோல் கப்பல்களோடும்
இருந்தாலும் இவையாவும் பார்வையின் ஜாலம் 
இதுபோல எல்லாமே வாழ்க்கையின் மாயம்.

ஒளிச்சித்திரம் : சாந்தகுமார் 

உரைச்சித்திரம் : ஜோதி












வெண்பனிச் சாரலும் ஊசியிலைக் காடும் 
உன்பணிச் சேரலால் ஓவியத்திரை சேரும் 
நண்பனின் செயலென்று நானொருகவி கொண்டு
என்பணி ஊரெல்லாம் உன் திறன் பாடும்.



சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு
தென்றலே உனக்கென்ன சொந்தவீடு
உலகம் முழுதும் பறந்து பறந்து
ஊர்வலம் வந்து விளையாடு...



வெண்மை நிற முகில் தழுவ
தென்னை மரம் முயலும் 
பச்சை நிறப் புல் விரித்து
பாரின் வளம் செழிக்கும் 
இச்சை மிகு காட்சி தனை
வண்ணத்தில தோய்த்து
கட்சிதமாய் சித்தரித்தான்
மண்ணின் மணம் சேர்த்து.


மரமதை மனதில் வைத்துத் 
திறமதைக் காட்ட வந்த
உரமதை உன்னில் கண்டு
கரமதை தட்டி நானும் 
வரமதை உனக்கு தந்த
இறைவனை போற்றுகின்றேன்.

ஒளிச் சித்திரம் : சாந்தகுமார்
உரைச்சித்திரம் : அருள்ஜோதி

Sunday, 13 September 2015

என் கவிதை வரிகள்















வில்லூன்றிக் கந்தனவன்
வினைதீர்க்க வந்திடுவான்
சொல்லூன்றிக் கேட்கும்வரம்
நொடிப்போதில் தந்திடுவான்
பல்தோன்றாக் காலம்முதல்
பாரத்து(உ)வந்த கந்தனிவன்
வள்ளிதேவயானையரின் 
மனங்கவர்ந்த காந்தனிவன்



மின்னலை வளைத்து
கோடுகளாக வரைந்த
உன்னுருவ ஓவியத்தில்
சூரியக் குழம்பில்
தூரிகை தோய்த்து
வர்ணந்தீட்ட முயன்றேன்.
சூரியப்புட்டி சரிந்ததனால்
கீழ்வானம் எங்கும்
சிவந்தது வானம்.



தமிழ் ஆழிக் கரையினிலே 
வெறும் சோழி பொறுக்கிடும்
சிறுவனைப்போல் நல்ல சொற்களைத்
தேடியலைகின்றேன் 

வாழும்வடிவான கவிதைகள் செய்திடவே 
இவ்வையகந் துயரறவே எந்நாளுந்
தமிழ் ஆழிக் கரையினிலே நானோடி
சிறு சோழி சேகரிப்பேன்

மூழ்கித் தவங்கிடந்து சிலர்நல்
முத்துக்கள் கொண்டு வந்தார்
கூவிக் கடை விரித்து அவர்
கூட்டத்திலே விற்றுவிட்டார்

தமிழ் ஆழிச் சங்கெடுத்து சிலர்
ஆபரணங்கள் செய்தார் அதை
அரிந்து எடுத்ததனால் அவர்
அங்கங்கள் ரணமாக்கிக்கொண்டார்

வலம்புரிச் சங்கெடுத்து சிலர்வானதிலூதி
இனம்புரியாத ஒரு இன்பத்தை நுகர்கின்றார்
தினந்தினங் காணும் காட்சிகள்தான் நான்
சோழிகள் தேடிடும் சிறுபிள்ளைதான். -ஜோதி.




திரண்ட தூசில் பிறந்த அண்டம் 
அணுப் பிளவு குலவில் பிளிந்த சக்தி
இருண்ட சூனியம் ஒளிர்ந்த விந்தை 
ஆதி விண் துகள் ஆனாய் நமோ நம.

ஒன்றாய் ஒடுங்கிப் பலவாய் விரிந்து
நின்றாய் நெடும் பாற்ப் புனலாய்ப்
பெருகு பிரபஞ்ச தோற்ற முந்த
நாத விந்துகள் ஆதி நமோ நம.

பெருநாதப் பிழம்பொளியாய்ப்
பிறந்த அண்டத் துகள்நிலைபோய்
அணுத் தோன்றுங் கணத்துள்ளே
கால நிர்ணய காரணா நமோ நம.

ஜோதி : பிரபஞ்ச பிரபந்தம்.


வாழ்க்கையில் எல்லாமே
நிரந்தரம் அற்றது
நல்லது நடந்தால்
அதை மகிழ்வோடு
ஏற்றுக் கொள் ஏனென்றால்
அது எப்பவும் நீடிக்காது
அல்லது நடந்தால்
அதற்காக கவலைப்படாதே
அதுவும் என்றும் நீடிக்காது.

Saturday, 12 September 2015

அன்னை நிதிய நினைவுகள்















































மறுமுறை உனது கருவறை வேண்டும் 
மறுபடி உனது மலர் மடி வேண்டும் 
அதுவரை எனது கனவுகள் போதும்
அடுத்தொரு ஜன்மம் எடுத்திட வேண்டும்.

வறுமையும் எனக்கொரு வரமாய் வேண்டும் 
சிறுமைகளற்ற உறவுகள் வேண்டும் 
பொறுமையை உன்னிடம் கற்றிட வேண்டும் 
அடுத்தொரு ஜன்மம் எடுத்திட வேண்டும்.

அண்ணன்மார் ஐவர் இருந்திட வேண்டும் 
அக்காவாய் இருவர் அமைந்திட வேண்டும் 
திண்ணமாய் இவரே தந்தையாய் வேண்டும் 
அடுத்தொரு ஜன்மம் எடுத்திட வேண்டும்.

என்மனைவியே மனைவியாய் அமையவும் வேண்டும் 
அவள் மலர்க்கரம் இளமையில் பற்றவும் வேண்டும் 
என்இருபதில் இவனே மகனாய் வேண்டும் 
அடுத்தொரு ஜன்மம் எடுத்திட வேண்டும்.

என்னைப் புண்பட வைத்த உறவுகள் வேண்டாம் 
என்னைப் புறந்தள்ளி வைத்த நண்பர்கள் வேண்டாம் 
என்னைப் பண்பட வைத்த குருவும் வேண்டும் நான் 
இன்னொரு ஜன்மம் எடுத்திட வேண்டும்.

மறுமுறை உனது கருவறை சேர்ந்து 
மனதினிலாடும் உறவுகள் சூழ்ந்து 
மகிழ்ந்திட ஜன்மம் எடுப்பது திண்ணம் 
அதுவரை எனது கனவுகள் போதும். -ஜோதி.