Monday, 14 September 2015

சாந்தகுமார் ஓவியம்



தொடர்மலை போலொரு உறவுகளாலே
அமைந்திடும் மானுடன் வாழ்வு அதில்
ஏற்றமும் உண்டு இறக்கமும் உண்டென
ஏற்பதே மானுடன் வாழ்வு.


இருகரை மீதெழும் இயற்கைக்கள்வாழ
நடந்திடும் நதியின் போக்கு அதுபோல்
ஒருவரை ஒருவர் வாழ்த்திடவாழும்
நிலையது மானுடன் போக்கு.


நதிக்கரை நாணல்போல் வளைந்திடவாழல்
மதியுறை மாந்தர்கள் வாழ்வாம் அன்றேல்
நதிநீர் வெள்ளத்தில் புரண்டிடும் மரமென
மதியுரை மாந்தர்கள் சொல்லாம்.


அலைகடல் மீதொரு ஓடம் போலே
அலைந்திடும் மானுடன் வாழ்வு அது
கரைதொடும் போல்வரும் அமைதியைப்போல
அமைந்திடும் மானுடன் மரணம்.

ஒளிச்சித்திரம் : சாந்தகுமார் 

உரைச்சித்திரம் : ஜோதி



தனிக்குன்றென உயர்ந்தும் குளிர்தருபசுமை
இன்றெனில் அதுவோர் பாறை அதுபோல்
மணிக்குன்றென செல்வம் படைத்தவன் கஞ்சன்
என்றெனில் அவனோர் பாறை.



கருநீலக்கடலோடு செவ்வானம் முட்டும் 
தொடுவானந் தொடுவதுபோல் கப்பல்களோடும்
இருந்தாலும் இவையாவும் பார்வையின் ஜாலம் 
இதுபோல எல்லாமே வாழ்க்கையின் மாயம்.

ஒளிச்சித்திரம் : சாந்தகுமார் 

உரைச்சித்திரம் : ஜோதி












வெண்பனிச் சாரலும் ஊசியிலைக் காடும் 
உன்பணிச் சேரலால் ஓவியத்திரை சேரும் 
நண்பனின் செயலென்று நானொருகவி கொண்டு
என்பணி ஊரெல்லாம் உன் திறன் பாடும்.



சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு
தென்றலே உனக்கென்ன சொந்தவீடு
உலகம் முழுதும் பறந்து பறந்து
ஊர்வலம் வந்து விளையாடு...



வெண்மை நிற முகில் தழுவ
தென்னை மரம் முயலும் 
பச்சை நிறப் புல் விரித்து
பாரின் வளம் செழிக்கும் 
இச்சை மிகு காட்சி தனை
வண்ணத்தில தோய்த்து
கட்சிதமாய் சித்தரித்தான்
மண்ணின் மணம் சேர்த்து.


மரமதை மனதில் வைத்துத் 
திறமதைக் காட்ட வந்த
உரமதை உன்னில் கண்டு
கரமதை தட்டி நானும் 
வரமதை உனக்கு தந்த
இறைவனை போற்றுகின்றேன்.

ஒளிச் சித்திரம் : சாந்தகுமார்
உரைச்சித்திரம் : அருள்ஜோதி

No comments:

Post a Comment