திருகோணமலை கோணேசர் ஆலயவரலாறு
இலங்கையின் கிழக்கு திசையில் அமைந்துள்ள இயற்கை எழில் மிக்க நகரம் திருகோணமலை. இலங்கையின் மிகப் பெரிய நதியும் புனிதமானதுமான மகாவலிகங்கை அவ்விடத்தில் கடலுடன் கலப்பதால் அப்பிரதேசம் இயற்கை வளத்துடன் சிறந்து விளங்குகின்றது. அங்கு சுவாமிமலை என்று வழங்குகின்ற உயர்ந்த குன்றம் ஒன்றின் உச்சியிலே திருக்கோணேஸ்வரர் எனும் பெயரில் சிவபெருமானின் ஆலயம் உள்ளது. இது அண்மைக் காலத்தில் பழைய ஆலயத்தின் மீது எழுப்பப்பட்ட புதிய ஆலயம் ஆகும் .
ஸ்ரீ லங்காவில் திரிகோண மலைப் பகுதியில் உள்ள திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வரலாறு சுமார் 4000 அல்லது 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதை த்ரிகூடம் என்றும் திரிகூடம் என்றும் கூறுவார்கள். அதாவது திருக்கோணமலையிலே உச்சியிலும், இடையிலும், அடிவாரத்திலுமாக மூன்று பெரிய ஆலயங்கள் இருந்துள்ளன என்பதைக் குறிக்கும் வகையில் அப்படி அழைக்கப்பட்டு இருந்திருக்கலாம். அல்லது தென் பகுதியில் சிவபெருமான் ஏற்படுத்திய மூன்று மலைகளின் காரணமாகவும் அமைந்து இருக்கலாம். மூன்று மலைகள் வந்த அந்தக் கதை பின்னர் வரும் .
இலங்கையின் மிகப் பெரிய நதியாகிய மகாவலிகங்கை எனும் நதி இலங்கையை சுற்றி உள்ள கடலுடன் இந்த ஆலயம் உள்ள பகுதியில்தான் கலக்கின்றது. அந்த மாவல்லி நதியின் மகத்துவமும் மிகப் பெரியது. அங்குள்ள ஸ்வாமிமலை ( தமிழ்நாட்டில் உள்ள ஸ்வாமி மலை அல்ல) எனப்படும் குன்றின் உச்சியில் எழுந்துள்ள திருக்கோணேஸ்வரர் ஆலயம் புதியதாக கட்டப்பட்டு உள்ளது என்றாலும், அதன் வரலாறும் அதிலுள்ள சிலைகளும் புராதானமானவை. ஒரு காலத்தில் இந்தியாவின் தென் பகுதியும் இலங்கையும் இணைந்து இருந்திருந்ததாகக் கூறுவார்கள். இரண்டு நாடுகளுக்கும் இடையே சிறிது தூரமே இருந்த நதியை படகு மூலம் கடந்து எளிதில் செல்லும் வகையில் போக்குவரத்து இருந்துள்ளது. அந்த நதி தற்போது கடலுடன் இணைந்து மறைந்து விட்டதாகக் கூறுவார்கள். இமய மலையின் மேல் உள்ள உத்தரக் கைலாச மலையில் இருந்த சிவபெருமான் இந்த மலையில் வந்து தங்கி இருந்ததினால் இதை தக்ஷிண கைலாயம் என்றும் அழைத்தார்கள்.
இந்த ஆலயம் தற்போது திருகோணேஸ்வரர் என்று அழைக்கப்பட்டதின் காரணம் பண்டைய காலத்தில், அநேகமாக பல்லவ மன்னர்கள் ஆண்ட காலத்தில் என்று கூறலாம், அங்கு ஒரு ஆலயம் கோணேஸ்வரர் என்ற பெயரில் இருந்துள்ளது. ஆனால் அது கடல் கொந்தளித்ததில் அங்குள்ள மலை அடிவாரத்தில் மூழ்கி விட்டதினால் இன்றும் அங்கு அந்த ஆலயத்தின் நினைவாக அந்த மலைக்கே பூஜைகளை செய்வதாக ஐதீகம் உள்ளது. இன்றைக்கும் மலையின் கீழ் பகுதியில், ஆழ் கடலின் உள்ளுக்குள் சில குகைகள் உள்ளதாகவும், அதுவே அன்றைய ஆலயம் இருந்த இடம் என்றும் வல்லுனர்கள் சிலர் கருத்துக் கூறுகிறார்கள். அன்று இருந்த ஆலயம் முற்றிலுமாக போர்த்துகீசியர்களால் அழிக்கப்பட்டு விட்டாலும், அப்போது இருந்த ஆலயச் சிலைகள் பாதுகாப்பாக ஒழித்து வைக்கப்பட்டு இருந்தன. அந்த வரலாற்றை பின்னர் கூறுகிறேன். முதலில் இந்த ஆலயம் எழக் காரணமாக இருந்த திருக்கோணமலை எழக் காரணமாக உள்ள புராணக் கதை ஒன்றைப் படிக்கலாம்.
முன்னொரு காலத்தில் கைலாயத்தில் சிவபெருமான் தனது மனைவி உமையுடன் வீற்று இருக்கும்போது அனைத்து தேவர்களும் , கடவுட்களும் அங்கு கூடி இருந்தார்கள். ஒவ்வொருவரும் சிவபெருமானை புகழ்ந்து கூறிக் கொண்டு இருந்தபோது படைக்கும் தொழிலுக்கு பிரும்மாவையும், காக்கும் தொழிலுக்கு விஷ்ணுவையும், படைப்பவை அனைத்தும் பெருகிக் கொண்டே இருந்தால் என்ன ஆவது என்பதற்காக அவ்வபோது அவர்களை அழிக்கும் தொழிலுக்கு ருத்திரன் என்ற பெயருடைய சிவபெருமான் படைக்கப்பட்ட கதையையும் எடுத்துக் கூறி பெருமைப் பட்டுக் கொண்டிருந்தவர்களை பார்த்து சிவபெருமான் புன்னகை புரிந்தவாறு கூறினார் அந்த பரப்பிரும்மனாக தான் படைத்த சிருஷ்டியிலே பூலோகத்தில் பூமியை தாங்கிப் பிடித்துக் கொண்டு இருக்கும் வகையில் ஆதிசேஷனை படைத்துள்ளதாகவும் நினைவு கூர்ந்தார். அப்போது அதைக் கேட்ட வாயு பகவானினால் ஆதிசேஷனுக்கு கொடுக்கப்பட்ட புகழைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடனே வெகுண்தெழுந்தவர் சிவபெருமானின் சபையில் கேட்டார் 'பரப்பிரும்மனே, உம்மை வணங்கி துதிக்கிறேன். நான் இப்படி பேசுவதற்கு மன்னிக்கவும். என்னை விட எந்த விதத்தில் ஆதிசேஷன் மேன்மையானவர்? அவர் எனக்கு எந்த விதத்திலாவது ஈடாவாரா?. அவருக்கு சுய பலம் இல்லை என்பதினால் அவருக்கு கிடைத்த பலம் விஷ்ணு கொடுத்ததல்லாவா' .
அதைக் கேட்ட யாரும் பதில் கூறவில்லை. அப்படி ஒரு நிலை வரும் என எவரும் எதிர்பார்க்கவும் இல்லை. வாயடைத்து நின்றவர்கள் மத்தியில் மீண்டும் வாயு பகவான் கூறினார் ' பரப்பிரும்மனே, ஆதிஷேஷனார் சக்தி வாய்ந்தவரா, நான் சக்தி வாய்ந்தவரா என்பதை நிரூபிக்க ஒரு போட்டியை ஆதிசேஷன் ஏற்க வேண்டும் . அந்தப் போட்டியின்படி நாங்கள் இருவரும் யுத்தம் செய்வோம். அதில் யார் வெற்றி அடைவார்களோ, அவர்களை மற்றவரை விட மேன்மையானவர் என்று நீங்கள் ஏற்க வேண்டும்' என்று கூற சற்றும் தாமதிக்காமல் அந்த போட்டியை ஆதிசேஷனும் ஏற்றுக் கொண்டார்.
அடுத்து யுத்தத்தை எங்கே வைத்துக் கொள்வது, எப்படிப்பட்ட யுத்தம் நடத்தப்பட வேண்டும் என அங்கிருந்த அனைவரும் கூடி விவாதித்தப் பின் பிரும்மா கூறினார் ' ஆதிசேஷன் கைலாய மலையை தனது உடலினால் சுற்றிக் கொண்டு மலையின் சிகரங்களை தனது தலைகளினால் மறைத்துக் கொள்ள வேண்டும். வாயு வேகமாக தனது சக்தியை வெளிப்படுத்தி அந்த சிகரத்தின் ஒரு பகுதியையாவது விழ வைக்க வேண்டும். அப்படி செய்தால் அவர் ஆதிசேஷனை விட மேன்மையானவராக கருதப்படுவார். இல்லை எனில் அவர் தான் கூறிய வார்த்தைகளுக்கு ஆதிசேஷனிடம் மனிப்புக் கேட்டுக் கொண்டு அவரை தன்னைவிட மேன்மையானவராக ஏற்றுக் கொள்ள வேண்டும் '.
பிரும்மா கூறியதை இருவரும் தயங்காமல் ஏற்றுக் கொண்டார்கள். ஒரு நல்ல காலத்தில் தேவர்கள் மற்றும் பிற கடவுட்கள் அனுமதி கொடுக்க இருவரும் யுத்தத்தைத் துவக்கினார்கள். ஆதிஷேஷனார் தன் உடலால் கைலாய மலையை நன்கு சுற்றிக் கொண்டு நின்றவாறு தனது ஆயிரம் தலைகளினாலும் மேகத்தை முட்டிய இமய மலையின் மீதிருந்த உத்திர கைலாய மலை வரை மறைத்துக் கொள்ள, வாயு பகவான் வேகமாக காற்றை வீசத் துவங்கினார். எத்தனை வேகமாக காற்றை வீசியும் ஆதிசேஷன் மறைத்து நின்ற பர்வதத்தை அசைக்க முடியாமல் வாயு பகவான் தடுமாறினார். பல காலம் தொடர்ந்து கொண்டு இருந்த போரினால் அண்டம் நடுங்கியது, அங்கிருந்த பறவைகள், மிருகங்கள், மனிதர்கள் என அனைவரும் இடம் பெயர்ந்து விழுந்து மடியத் துவங்க, நகரங்களும் அழியத் துவங்க , அங்காங்கே நதிகள் சீறி எழுந்து மிச்சம் இருந்த நகரங்களை நாசம் செய்யத் துவங்க தேவர்கள் அஞ்சி ஓடி சிவனை சரணடைந்தார்கள். அவர்களுடன் பிரும்மாவும் சென்றார்.
ஆதிசேஷன் மற்றும் வாயு பகவானின் யுத்தத்தினால் நிகழும் நிலையை எடுத்துக் கூறி அதை தடுத்து நிறுத்த வேண்டும் என சிவபெருமானிடம் அனைவரும் வேண்டிக் கொள்ள, அவர்கள் கூறியதைக் கேட்ட சிவபெருமான் கூறினார் ' பிரும்மனே, நீங்கள் யாரும் கவலைப்படத் தேவை இல்லை. இந்த யுத்தத்தை உருவாக்கியவன் நான்தான். அதற்குக் காரணம் தட்ஷின தேசத்தின் நானும் உமையும் சென்று தங்க அங்கு ஒரு கைலாய மலையை உருவாக்க எண்ணினேன். அதற்காகவே இந்த நாடகத்தை அரங்கேற்றினேன். ஆகவே கவலை வேண்டாம். நான் உருவாக்கியதை நானே முடித்து வைக்கிறேன்' எனக் கூறியவர் பிரும்மாவிடம் உடனடியாக உத்தர கைலாய மலையைப் போல இன்னுமொரு மலையை இமய மலைப் பர்வதத்தின் மேல் பகுதியில் உருவாக்குமாறு கூறினார்.
பிரும்மாவும் சற்றும் தாமதம் செய்யாமல் விஸ்வகர்மாவின் துணைக்கொண்டு உத்தர கைலாயத்தைப் போலவே இன்னுமொரு கைலாய மலையை தயார் செய்து முடித்தார். அடுத்தக் கவலை அதை எப்படி, எந்த தட்ஷிணப் பகுதிக்கு எடுத்துச் செல்வது? ஜாடை காட்டி ஆதிசேஷனை அழைத்தார் சிவபெருமான். அருகில் வந்த ஆதிசேஷனிடம் 'ஆதிசேஷனே நாம் இன்னொரு கைலாய மலையை தென் பகுதியில் அமைக்க எண்ணி உள்ளோம். அதற்கான தருணம் இப்போது வந்து விட்டது. அந்தக் காரணத்தைக் கேட்பாயாக ' என்று கூற, அதை தனது தலைக் குனிந்து ஆதிஷேசம் கேட்ட நேரத்தில் வாயு வீசிய காற்றில் பிரும்மா படைத்திருந்த கைலாய மலை உத்தரக் கைலாய மலையில் இருந்து பிளந்து வானில் பறக்கத் துவங்கியது. ஆதிசேஷன் அதைத் தடுக்க ஓடினார் . அவ்வளவுதான், அதையே எதிர்பார்த்திருந்த சிவபெருமான் உடனடியாக வாயு பகவானை அழைத்து வானிலே பறந்து கொண்டிருந்த பிரும்மன் படைத்திருந்த கைலாய மலையின் மறு உருவை அப்படியே கொண்டு சென்று தற்போது இலங்கை என அழைக்கப்படும் ஈழ நாட்டின் தென் பகுதியில் கொண்டு போய் வைக்குமாறு கூறினார். வாயு பகவானும் அதை தாமதிக்காமல் செய்து முடித்தார். அது செய்யப்பட்டு முடிந்ததும்தான் யார் தோற்றது, யார் வெற்றி பெற்றது என்ற சர்ச்சை மீண்டும் சிவபெருமானின் முன்னால் வந்தது. சிவ பெருமான் வாயுவையும், ஆதிசேஷனையும் அழைத்து தான் நடத்திய நாடகத்தை எடுத்துக் கூறி யாரும், யாருக்கும் மென்மையானவரும் அல்ல, கீழானவர்களும் அல்ல. அவரவர் படைக்கப்பட்டதிற்கு ஏற்ப அவரவர் தத்தம் தொழிலை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று உண்மையை எடுத்துரைத்து அவர்களை ஆசிர்வதித்து, அவரவர் இருந்த இடங்களுக்கு அனுப்பி வைத்தார்.
ஆக சிவபெருமானே பிரும்மாவின் மூலம் இன்னொரு கைலாய மலையை உருவாக்க வைத்து அதை ஈழ நாட்டின் தென் பகுதியில் கொண்டு வைக்க ஏற்பாடு செய்து, அதையும் தனது வாசஸ்தலமாக்கிக் கொண்டார். இப்படியாக உருவானதே திருகோணீ ஸ்வரர் மலை ஆகும். அடுத்து பிரும்மாவை அழைத்த சிவபெருமான் அவரிடம் கூறினார் ' இன்னும் சில காலத்தில் இந்த மலையில் உன்னதமான நிகழ்வுகள் நடைபெறும். நானும் உமையும் அங்கு தங்கி இந்த உலகை ரஷித்தவாறு இருப்போம். ஒரு காலத்தில் இந்த மலையே ஒரு ஆலயமாகும். அங்குள்ள பல பிராகாரங்களில் தேவ ரிஷி முனிவர்கள், மற்றும் தேவ லோகத்தில் உள்ள நீங்கள் அனைவரும் வந்திருக்க சிறப்பான ஏற்பாடுகள் நடக்கும்'. சிவபெருமான் கூறியது போலவே பின்னாளில் அங்கொரு அற்புதமான ஆலயம் எழுந்தது.
பகீரதன் தவத்தினால் ஏற்பட்ட கங்கையின் பிரவாகத்தை அடக்க அவளை தனது முடியில் முடித்து வைத்துக் கொண்டார் சிவபெருமான் என்றாலும், அவர் முடியில் அவர் வைத்திருந்தது கங்கை நதியின் பிரவாகத்தை மட்டுமே. ஆனால் சில நேரங்களில் கங்கா தேவியும் அங்கு அவர் முடியில் வந்து தங்குவாள். ஆனால் உமையுடன் அவர் தனிமையில் இருக்கும்போது, கங்கா தேவி அங்கிருந்து சென்று விட வேண்டும் என்பது உமையின் கண்டிப்பான கட்டளை. அதற்குக் காரணம் தனிமையில் சிவபெருமானுடன் உமை இருக்கும்போது அவர்களை அந்தக் அந்த கோலத்தில் வேறு எந்தப் பெண்ணுமே பார்க்கக் கூடாது, அவர்களால் அவர்களுக்கு எந்த தொல்லையும் ஏற்படக் கூடாது என்பதே.
விஷ்ணு செய்திருந்த ஏற்பாட்டின்படி திருகோணீஸ்வரர் மலையில் ஒரு நாள் சிவனும் பார்வதியும் தனிமையில் கேளிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தபோது கங்கா தேவியானவள் அவர் முடியில் சென்று அமர்ந்து கொண்டு ஒரு பெண்ணின் குரலில் கலகலவென சிரிப்பது போல சப்தம் செய்தாள். 'இதென்ன உங்கள் முடியில் இருந்து எதோ சப்தம் வருகிறது' எனப் பார்வதி கேட்க, அப்போது தன் முடியில் கங்கை அமர்ந்திருப்பதை உணர்ந்த சிவனார் 'ஒன்றும் இல்லையே, கங்கை நதியல்லவா பாய்ந்து ஓடிக் கொண்டு இருக்கிறது. அதன் சப்தமே இது ' என்று கூறி விட்டு, பார்வதிக்கு தெரியாதபடி தன் தலையில் இருந்த கங்கா தேவியை நீர் திவலைகளாக்கி அதை தலையில் இருந்து துடைத்து ஏறிய அந்த நீர்த் திவலைகள் சிவனாரின் பாதத்தில் சென்று விழ, நீர் திவலைகளாக இருந்த கங்கா தேவி சிவனார் பாதத்தில் இருந்து வெளிக் கிளம்பி திருகோணீஸ்வரர் மலையில் இருந்து பெரும் பிரவாகமாகப் பாய்ந்து அந்த மலையை சுற்றி ஓடியபடி கடலுடன் கலந்தாள். அப்படி அவள் மலையை சுற்றி ஓடியபோது, அவள் உடலில் இருந்து வழிந்த நீர் இன்னும் சில இடங்களில் கிளை நதியாகப் பாய்ந்து ஓடியது.
இப்படியாக அந்த தென் கயிலையிலும் சிவபெருமானின் அருளினால் கங்கை நதி பிறந்ததும், அதைக் கண்டு மகிழ்ந்த நாரத முனிவர் பிரும்மாவுடன் ஓடி வந்து விஷ்ணுவிற்கு நன்றி கூற, அவர்களை அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் சென்ற விஷ்ணுவும், கங்கா தேவியும் சிவபெருமானையும் உமையும் தரிசித்து நடந்ததைக் கூறி அவர்களது ஆசிகளை வேண்டி நின்றார்கள். சிவபெருமானும் புன்னகைப் புரிந்து அவர்களுக்கு ஆசி கூறி அனுப்பியப் பின் தன் பாதத்தில் இருந்து வெளிச்சென்ற அந்த கங்கை நதியில் குளித்தால் ஏற்படும் பலவிதமான புண்ணியங்களை அவர்களுக்கு எடுத்துரைத்தார். இமய மலைப் பர்வதத்தில் தன் முடியில் இருந்து வெளியான கங்கை, தென் பகுதியில், அதாவது இமய மலையின் அடிப்பகுதியில் உள்ள தென் பகுதியில், தனது பாதத்தில் இருந்து வெளியேறியதன் மூலம், தனது தலை முதல் பாதம் வரை தன்னை அபிஷேகம் செய்த பலனுடன் கங்கை அங்கு இருக்கிறாள் என்பதினால் அது விசேஷமான கங்கை நதியாக கருதப்படும் என்றும் அதில் ஸ்நானம் செய்பவர்கள் அடைய உள்ள பெரும் பயன்களையும் விலாவாரியாக எடுத்துரைத்தார். அந்த கிளை நதியில் உற்பத்தி ஆன ஒன்றுதான் கதிர்காமனில் ஓடும் மணிக்கங்கை நதியும் ஆகும். திருகோணீஸ்வரர் மலை உச்சியில் உலக அன்னையான உமைக்கு ஒரு ஷணம் கங்கையின் சிரிப்பு மிக அதிக (மஹா) மன வேதனையை தந்ததினால் திருகோணீஸ்வரர் மலையில் உற்பத்தியான அந்த கங்கையின் பெயர் மஹா வலி தந்த கங்கை என்பதை குறிக்கும் வகையில் மாவலிகங்கை என்ற பெயரைப் பெற்றுள்ளது என்று சிலர் கருத்துக் கூறுவார்கள்.
தமிழ் மொழிப் புலவர்களான திருஞான சம்மந்தம், திருமூலர் மற்றும் அருணகிரிநாதர் போன்றவர்களால் பாடப்பட்ட தலம் திருக்கோணேஸ்வரம் என்பதில் இருந்து இதன் மேன்மை புரியும். கி.மு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தை ராவணன் பூஜித்து வந்ததாக மட்டக்கிளப்பு மானியத்தில் குறிப்புக்கள் உள்ளன. அதற்கு ஆதாரமாக அனைவரும் குறிப்பிடுவது அங்குள்ள ராவணன் வெட்டு என்ற ஒரு பாறை இடுக்கு ஒன்றைத்தான் .
கோணேஸ்வர மலையில் ஒரு பெரிய பாறைப் பிளவு உள்ளது. அந்த பிளவிற்குக் காரணம் ஒரு விசேஷ லிங்கத்தை அவரது தாயாரின் பூஜைக்காக எடுத்து வருவதற்காக கைலாசத்துக்கே சென்று சிவபெருமானிடம் இருந்து இருமுறை சிவலிங்கத்தை பெற்றுக் கொண்டு வந்த ராவணன் வரும் வழியில் ஏமார்ந்து போய் தான் எடுத்து வந்த லிங்கத்தை தவற விட்டார். ஆகவே மூன்றாம் முறையாக திருக்கோணேஸ்வரர் சிவாலயத்தில் இருந்து சக்தி வாய்ந்த சிவலிங்கத்தை எடுத்து வரச் சென்ற ராவணன் பூமியில் இருந்த அதை அங்கிருந்து அதை எடுத்து வர முடியாமல் போனதினால் அந்த இடத்தையே பெயர்த்துக் கொண்டு வந்ததாகவும் அதனால்தான் மலையில் அந்த பிளவு ஏற்பட்டதாகக் கூறுவார்கள். ராவணன் எடுத்துச் செல்ல முயன்ற சிவலிங்கத்தின் கதை என்ன?
ராவணன் பல அறிய வரங்களைப் பெற்று ஆட்சியில் இருந்தான். மிகப் பெரிய சிவ பக்தனாக இருந்தவன், நீதி தவறாமல் ஆட்சி செய்து வந்தவன் காலம் செல்லச் செல்ல அவனுக்கு கிடைத்திருந்த வரங்களினால், இனி நம்மை வெல்ல யாரும் இல்லை என்ற இறுமாப்பு கொண்டு அகங்காரம் பிடித்தவன் ஆயினான். தேவர்களையும் அவ்வபோது துன்புறுத்தி வந்தான். ஆனால் அவன் சிவபெருமானின் பூரண அருளைப் பெற்று இருந்ததினால் அவனை யாராலும் ஒன்றும் செய்ய முடியாமல் போனதினால் மனம் புழுகிக் கொண்டு இருந்தார்கள். சிவ பூஜையை ராவணன் மட்டும் செய்யவில்லை. ராவணனின் குடும்பமே சிவபக்தர்கள். அதிலும் அவனது தாயாரான கைகேசி சிவபெருமானின் பெரிய பக்தை. அவள் நாள் தவறாமல் சிவபூஜை செய்து வந்தவள்.
இந்த நிலையில் ஒரு நாள் ராவணன் அவனது தாயார் கைகேசி நெல்லைக் குத்தி அரிசியை எடுத்து அதை மாவாக்கிக் கொண்டு இருப்பதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தான். தாயாரிடம் சென்று அதற்கான காரணத்தைக் கேட்டான். அவள் கூறினாள் ' மகனே, நீ இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உலகையும் ஆண்டவாறு, உன்னை யாராலும் வெற்றி கொள்ள முடியாதவாறு இருக்கவே நான் தினமும் ஆயிரம் மாவிலான லிங்கங்களை செய்து, அதை கடற்கரைக்கு கொண்டு சென்று அங்கு அவற்றுக்கு பூஜை செய்து விட்டு கடலில் கரைத்து விட்டு வருகிறேன். நான் பூஜித்தப் பின் கடலில் கரைக்கும் சிவ லிங்கங்கள் பல்லாயிரக்கணக்கான சிவ கணங்களாக கடலில் வாழ்ந்திருந்து அரணைப் போல உனது ராஜ்யத்தைக் காத்து வரும். இந்த ஆயிரம் மாவு லிங்கங்களுக்கு இணையான சில சிவலிங்கங்கள் கைலாயத்தில் சிவபெருமானிடம் அல்லவா உள்ளது. அவற்றில் ஒன்று கிடைத்தாலும் நான் செய்யும் பூஜைக்கு இணையாக இருக்கும். ஆனால் அதை யார் கொண்டு வர முடியும் என்பதினால் இப்படி என்னால் முடிந்ததை உனக்காக செய்கிறேன்' என்று கூறினாள்.
அதைக் கேட்ட ராவணன் வருத்தம் அடைந்தான். தனக்காக தனது தாயார் செய்யும் பூஜைக்கு தன்னால் ஆன உதவியை செய்ய வேண்டும் என நினைத்தவன் தாயாரிடம் கூறினான் ' அம்மா, இத்தனை வாய்மை வாய்ந்த மகன் நான் இருக்க நீ ஏன் இப்படி கஷ்டப்பட்டுக் கொண்டு மாவிலான சிவலிங்கங்களை செய்து பூஜித்தது வருகிறாய்? நான் கைலாயத்துக்கு சென்று அந்த சிவலிங்கத்தை சிவபெருமானிடம் இருந்து வாங்கிக் கொண்டு வருகிறேன்' என சூளுரைத்து விட்டு கைலாயத்துக்கு சென்றான்.
கைலாயத்துக்கு சென்றவன் அதன் வாயிலில் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்தான். அவன் தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவன் முன் தோன்றி அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அவனும் தனது தாயாரின் ஆசையைக் கூற அதைக் கேட்ட சிவபெருமானும் வேறு வழி இன்றி அவனுக்கு ஒரு சிவலிங்கத்தை கைலாயத்தில் இருந்து தந்தப் பின் அதை அவன் எடுத்துச் செல்லும் வழியில் பூமியில் எங்குமே வைக்கக் கூடாது என்றும், ஆயிரம் மாவு லிங்கங்களை செய்து அவன் தாயார் பூஜித்ததை விட, பல்லாயிரக்கணக்கான வருடங்கள், பல கோடி தேவர்களால் ஐந்து வேளை பூஜை செய்து சக்தியூட்டப்பட்ட தன்னுடைய ஆத்ம லிங்கங்களில் அதுவும் ஒன்று என்றும், எந்த இடத்திலாவது அவன் பூமியில் அதை வைத்து விட்டால் அதை திரும்ப எடுக்க முடியாது என்றும் அதன் பின் அதன் சக்தி அதனுள் அங்கேயே அடங்கி இருக்கும் என்று கூறி அனுப்பினார். அதை எடுத்துக் கொண்டு நாடு திரும்பத் துவங்கிய ராவணனை நினைத்து தேவர்கள் அஞ்சினார்கள். அதை எடுத்துக் கொண்டு சென்று அதை பூஜித்தால் பிறகு ராவணனை யாருமே அடக்க முடியாதே என அஞ்சி நாரதரிடம் சென்று அதை தடுத்து நிறுத்த ஒரு உபாயத்தைக் கேட்டார்கள்.
அவரும் அந்த தேவர்களுடன் சென்று விநாயகரை வேண்டி துதிக்க அவரும் அவர்கள் முன்னால் பிரசன்னமாகி அவர்களுக்கு உதவுவதாகக் கூறினார். அதற்கேற்ப அவர் ஒரு வயதான பிராமண உருவில் சென்று ராவணனை வழியில் சந்தித்தார். சிவ லிங்கத்தை கையிலே வைத்துக் கொண்டு தன் நாட்டை நோக்கி சரியான பாதையில் சென்று கொண்டிருந்த ராவணனின் கவனத்தை சற்றே கலைய வைத்தார். தன்னையே அறியாமல் புத்தி தடுமாறியவன் தான் சென்று கொண்டு இருந்த பாதையை மறந்து வேறு வழியில் செல்லத் துவங்கினான்.
சிவலிங்கத்தை தூக்கிக் கொண்டு வழி தவறி சென்று கொண்டு இருந்த ராவணனுக்கு வழியில் ஒரே தாகம் எடுத்தது. ஆனாலும் வைராகியமாக சென்று கொண்டு இருந்தபோது வழியில் ஒரு கமண்டலத்தில் தண்ணீருடன் சென்ற பிராமண உருவில் இருந்த விநாயகரை பார்த்தான். அவர் அருகில் சென்று தான் வழி தவறி வந்து விட்டதாகவும், தான் இலங்கைக்கு செல்ல வேண்டிய வழியைக் காட்டுமாறும் வேண்டிக் கேட்டுக் கொண்டப் பின், தனக்கு தாகமாக உள்ளதினால் குடிக்க சிறிது தண்ணீர் தர முடியுமா என்று கேட்டான். அதையே எதிர்பார்த்து காத்திருந்த விநாயகர் அவனுக்கு ஒரு கமண்டலம் தண்ணீரைக் கொடுத்தார். தனது மடியில் லிங்கத்தை வைத்துக் கொண்டே நீரைக் குடித்தப் பின் அவரிடம் பேசிக் கொண்டே செல்லத் துவங்க அவன் வயிற்றிலே சென்ற நீர் பெரும் ஆறு போல வயிற்றில் பெருக்கெடுக்கத் துவங்க அவனுக்கு சிறுநீர் உபாதை வந்து விட்டது. ஆகவே தன்னுடன் வந்து கொண்டிருந்த பிராமண உருவில் இருந்த விநாயகரிடம் அந்த சிவ லிங்கத்தை கீழே வைக்காமல் வைத்துக் கொண்டு இருக்குமாறு கூறி விட்டு சிறுநீர் கழிக்கச் சென்றான்.
அவன் வருவதற்குள் விநாயகர் அந்த சிவலிங்கத்தை கீழே வைத்து விட்டு மறைந்து விட்டார். அந்த இடம் பாட்னாவின் அருகில் உள்ள பைத்யநாத் ஆலயம் உள்ள இடம். அங்குதான் ராவணன் ஏமார்ந்து போய் விநாயகரிடம் தந்து அவர் கீழே வைத்த ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான வைஜ்யநாத் எனும் லிங்கம் உள்ளது. சிறுநீர் கழித்து விட்டு வந்தவன் அந்த சிவ லிங்கத்தை எடுக்க முடியாமல் திணறினான். தான் எமார்ந்து விட்டதை நினைத்து வருந்தினான். எத்தனைக் கஷ்டப்பட்டு வந்து இப்படி ஏமார்ந்து விட்டோமே என எண்ணி வருந்தியவன், மீண்டும் கைலாயத்துக்கு சென்று இன்னொரு சிவலிங்கத்தைப் பெற்றுக் கொண்டு வர தவம் இருக்கலானான்.
இந்த முறை ராவணன் லேசில் ஏமாற மாட்டான் என்பது அவருக்குத் தெரியும். ஆகவே ஒரு ஆட்டு இடையன் போல வேடம் அணிந்து கொண்டு அவன் சென்ற வழியில் அமர்ந்து கொண்டார். சிவலிங்கத்தை கையிலே வைத்துக் கொண்டு தன் நாட்டை நோக்கி சரியான பாதையில் சென்று கொண்டிருந்த ராவணன் இம்முறை வழியில் தாகம் எடுத்தாலும் தண்ணீரைக் குடிக்கக் கூடாது என்ற திடத்துடன் இருந்தான். மனதை இருக்க வைத்துக் கொண்டு அதை அலைபாயாத வண்ணம் சிவா நாமத்தை ஜெபித்தவாரே வைராகியத்துடன் சென்று கொண்டு இருந்தான். தற்போது கர்நாடகாவின் கோகர்ணம் உள்ள இடத்தை அடைந்து விட்டான். இன்னும் சற்று தூரம்தான், இலங்கை வந்து விடும். ஆனால் அதற்குள் வினாயகரின் ஏற்பாட்டின்படி வாயு பகவான் திடீர் என அந்த இடத்தில் அதிக குளிரை தோற்றுவிக்க கோகர்ணத்தை அடைந்த ராவணனுக்கு குளிரினால் தாங்க முடியாத வேதனை ஏற்பட்டு சிறுநீர் பிரச்சனை ஏற்பட்டது.
கையிலோ லிங்கம், அதை எங்கு வைப்பது? ஆனால் இன்னும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் குளிரினால் சிறுநீர் அவதி ஏற்பட்டு விட்டது . லிங்கத்தை வைத்துக் கொண்டும் சிறுநீர் கழிப்பது தவறு. அப்படி செய்தால் அதன் சக்தி விலகி விடும். செய்வதறியாது திகைத்தவன் அங்கிருந்த ஆட்டு இடையனைப் பார்த்தான். அவனைக் கூவி அழைத்தான். அந்த லிங்கம் பூஜைக்கான லிங்கம் என்றும் கீழே வைத்தால் அதற்கு தோஷம் வந்து விடும் என்பதினால் சற்று நேரம் அதை அவன் மடியில் வைத்துக் கொண்டு இருந்தால் அதற்குள் தான் சிறுநீர் உபாதயை விலக்கிக் கொண்டு வந்து விடுகிறேன் எனக் கெஞ்சினான். அந்த இடையன் வேடத்தில் இருந்த விநாயகரும் அதற்கு ஒப்புக் கொள்ள, ராவணனோ இந்த முறை தான் ஏமாறக் கூடாது என்றெண்ணிக் கொண்டு, பத்தே நிமிடம் அதை வைத்திருக்குமாறும், அதற்குள் சிறுநீர் கழித்து விட்டு வருவதாகக் கூறிவிட்டு அவன் வரும்வரை அதை கீழே வைக்கலாகாது என ஒரு சத்தியம் வாங்கிக் கொண்டு சிறுநீர் கழிக்கச் சென்றான்.
ஆட்டு இடையனோ கைநீட்டி ராவணனிடமும் ஒரு சத்தியம் வாங்கிக் கொண்டான். பத்து நிமிடம் ஆன பின் மூன்று முறை தான் குரல் கொடுப்பேன் என்றும் அதற்கும் வராவிடில் அதை கீழே வைத்து விட்டு தான் சென்று விடுவேன் என்றும் கூறினான். ராவணனும் அதற்கு ஒப்புக் கொண்டான். பத்து நிமிடம் கடந்தது. ஆட்டு இடையன் மூன்று முறைக் குரல் கொடுத்தான். இன்னும் இருபது அடியே பாக்கி இருக்க கொடுத்த சத்தியத்தின்படி அந்த ஆட்டு இடையன் அதை கீழே வைத்து விட்டான். அதுவே தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள கோகர்ணம் எனும் இடத்தில் உள்ள ஆலயத்தில் வினாயகர் வைத்த ஆத்ம லிங்கம் ஆகும். முதல் முறை கிடைத்த லிங்கம் பீகார் மாநிலத்தில் வைஜ்யநாத் ஆலாயத்தில் தங்கிவிட்டது. இப்போது இரண்டாம் முறைக் கிடைத்த லிங்கம் கோகர்ண ஆலயத்தில் தங்கி விட்டது.
இந்த முறையும் காரியம் கெட்டு விட்டது. ஓடோடி வந்த ராவணன் கோபமுற்று அந்த ஆட்டு இடையனை வெட்ட தன் கத்தியை உருவியபோது, அந்த ஆட்டு இடையன் ஓடத் துவங்கினான். அப்போது விஷ்ணு பகவான் ஒரு வயதானவர் உருவில் அங்கு தோன்றி , 'நில்....ராவணா .....தவறு செய்யாதே, நில்'...... எனக் கத்தியபடி ஓடி வந்து ராவணனை தடுத்து நிறுத்தினார். சத்தியத்தை மீறுவது முறையா என்று கேட்க ராவணன் வெட்கி தலை குனிந்தான். இரு முறை தான் எப்படி எல்லாம் ஏமார்ந்து போனேன் என்பதை விவரமாகக் கூறிவிட்டு, மீண்டும் மூன்றாம் முறையாக கைலாயத்துக்கு சென்று சிவலிங்கத்தைப் பெற்று வர தீர்மானித்து விட்டதாகக் கூறியவுடன் அந்த வயதான மனிதர் அவனை தடுத்து நிறுத்தி நகைத்தவாறு கூறினார் ' ராவணா, இந்த சுலபமான காரியத்துக்கு நீ ஏன் தேவை இல்லாமல் கைலாயத்துக்குப் போக வேண்டும்? உன் ராஜ்யமான இலங்கையின் தென் பகுதியிலேயே பிரும்மா படைத்து வைத்துள்ள தக்ஷிண கைலாயம் எனும் மலைப் பருவத்தில் ஏராளமான லிங்கங்கள் உள்ளது தெரியாதா? அதன் நடுவில் உள்ள மிகப் பெரிய சிவலிங்கம் சிவபெருமானே வந்து ஸ்தாபித்த ஆத்ம லிங்கமாகும். அனைத்து லிங்கங்களை விட சிவபெருமானே வந்தமர்ந்துள்ள அதல்லவா மேன்மையான லிங்கம். அதை எடுத்துப் போய் பூஜிப்பதை விடுத்து வேண்டாத காரியத்தை ஏன் செய்கிறாய் என்று அவனை உசுப்பேற்றினார் .
அந்த நேரத்தில்தான் அவன் பிளந்து எடுத்த பர்வதப் பகுதியுடன் இருந்த சிவலிங்கத்தை தன் கைகளில் ஏந்திக் கொண்டு நாடு செல்லக் கிளம்பினான் ராவணன். அவன் பர்வதத்தை தனது கைகளில் தூக்கியவுடன் அந்த மலையை தன் நுனிக் காலினால் அழுத்தினார் சிவபெருமான். அவ்வளவுதான், ராவணன் அருகில் இருந்த தேர் உடைந்து விழுந்தது. அவன் இடையில் வைத்திருந்த வாளும் இரண்டாக உடைந்து விழ, உடைந்து விழுந்த மலையின் அடிப்பகுதியில் அதை தாங்கிக் கொண்டு இருந்த ராவணனின் கைகள் சிக்கிக் கொள்ள, கைகளை விலக்கிக் கொள்ள பிரயர்த்தனம் செய்தபோது அடிப்பட்ட கைகளில் இருந்து ரத்தம் ஆறாக ஓட, அப்படியே மயங்கி கடலுக்குள் விழுந்தான் ராவணன். அவன் பெயர்த்து எடுத்த மலைப் பகுதியும் சிவலிங்கத்துடன் சேர்ந்து அந்த கடலுக்குள் முழுகி மறைந்தது.
அதைக் கண்ட தேவர்கள் ஆஹா..,ராவணன் மரணம் அடைந்து விட்டான் என்று மகிழ்வு கொண்டு சிவபெருமானுக்கு நன்றி கூறி விட்டு தத்தம் இடங்களுக்கு திரும்பிச் சென்றார்கள். ஆனால் கடலில் விழுந்த ராவணனோ மரணம் அடையவில்லை. கடலுக்குள் விழுந்தவன் கடல் நீரினால் மயக்கம் களைய, மெல்ல நீந்திக் கொண்டு வந்து கடல் ஓரத்தில் விழுந்து அப்படியே நெடுநேரம் மயங்கிக் கிடந்தான். அவன் பெற்று இருந்த வரங்களினால் அவன் உயிர் பிரியவில்லை. பல நாட்கள் அப்படியே கிடந்தவன் ஒருநாள் மயக்கம் முற்றிலும் தெளிந்து எழுந்தான்.
மயக்கம் தெளிந்து எழுந்தவன் அங்கும் இங்கும் தான் பெயர்த்து எடுத்த மலைப் பகுதியில் இருந்த சிவலிங்கத்தை தேடினான். மலைப் பகுதியும் காணவில்லை, சிவலிங்கமும் கண்களுக்கு தெரியவில்லை. நடந்ததை நினைத்துப் பார்த்தான். ஆனால் தனக்கு ஏற்பட்ட நிலைக்கு காரணத்தை அவனால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆகவே மீண்டும் தவறு செய்து சிவலிங்கத்தை இழந்து விட்டோமே என நினைத்து வருந்தியவன் விடா முயற்சியாக மீண்டும் ஒருமுறை சிவபெருமானிடம் இருந்தே நேரடியாக சிவலிங்கத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்து, அங்கேயே தன் தலைகளில் ஒன்றை வெட்டி எடுத்து அதை வீணையின் சுரைப் பகுதியாகவும் இருபது கைகளில் ஒன்றை வெட்டி எடுத்துக் கொண்டு அதை இசைக்கும் பகுதியாகவும், அதன் நரம்புகளை அறுத்தெடுத்து வீணை நாண்களாகவும் மாட்டி ஒரு வீணையை செய்தான். கடற்கரையிலேயே அமர்ந்து கொண்டு சிவபெருமானை துதித்து சாமகான வேதப் பாடலை உரத்தக் குரலில் பாடத் துவங்கினான்.
சிவபெருமான் இசைக்கு மயங்குபவர். அதுவும் இனிமையான சாமகான வேதப் பாடல்களில் மனதை பறி கொடுப்பவர். கண்களை மூடிக் கொண்டு, ராவணன் வீணையை மீட்டியபடி, மனதை உருக்கும் வகையிலான சிவனார் மீதான பாடல்களை பாடப்பாட இன்னிசையில் மயங்கிய சிவனார் தனது ஒரு கணத்தை அனுப்பி திருகோணிஸ்வரர் ஆலயத்தின் அடிவாரத்தில் இருந்த கடற்கரையில் வெட்டப்பட்ட கை மற்றும் திருகி எடுத்த தலையில் இருந்து ரத்தம் கொட்டியக் கொண்டு இருந்த நிலையிலும் அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு பாடிக் கொண்டு இருந்த ராவணனை அப்படியே தூக்கி வருமாறு கூறினார். சிவகணங்கள் தன்னை மறந்து கண்களை மூடிக்க் கொண்டு இசைத்துக் கொண்டு இருந்த ராவணனை அப்படியே அந்த இடத்தோடு தூக்கிக் கொண்டு வந்து திருகோணிஸ்வரர் ஆலயத்தின் உள்ளே அமர்ந்திருந்த சிவனார் முன் கிடத்தினார்கள். அப்போதுதான் ராவணனுக்கு தன் சுய நினைவே வந்தது. சுயநினைவுக்கு வந்தவன் சிவபெருமானைப் பார்த்தான். அப்படியே சிவன் முன் விழுந்து வணங்கினான். அவன் நிலையைக் கண்ட சிவனாரும் அவனுக்கு அருள் புரிய அவன் மீண்டும் பத்து தலைக் கொண்டவனாகவும், இருபது கைகள் கொண்டவனாகவும் பழைய நிலைக்கு மாறினான். மீண்டும் மீண்டும் சிவபெருமானையும், உமையையும் கீழே விழுந்து விழுந்து நமஸ்கரிக்க, அவன் கேட்டபடி அவனுக்கு மூன்றாவது ஆத்ம லிங்கத்தை தந்தருளினார்.
அப்போது கூறினார் 'ராவணா, இனிமேலும் என்னால் உனக்கு ஆத்ம லிங்கம் கொடுக்க இயலாது. ஆகவே இதை பத்திரமாகக் கொண்டு சென்று உன் தாயாரிடம் கொடுத்து பூஜை செய்யச் சொல். இதை உன்னால் தூக்க முடியாமல் கீழே வைத்தாலும் ஒன்றும் ஆகாது. நீயே விரும்பினால் ஒழிய இது பூமியில் புதைந்து போகாது. ஆனால் நீயே அதை விரும்பி இங்கேயே புதைந்து இருக்கட்டும் என கீழே வைத்தால் மட்டுமே அங்கேயே எடுக்க முடியாமல் அங்கேயே இருந்து விடும் '. இப்படியாகக் கூறியவர் உடைந்து போன வாளுக்கு பதிலாக இன்னொரு வாளையும், உடைந்து போன தேருக்கு பதிலாக இன்னொரு தேர் ஒன்றையும் அவனுக்கு தந்தார்.
அதையே எதிர்பார்த்துக் காத்திருந்த அந்தணர் உருவில் இருந்த விஷ்ணு பகவான் கூறினார் ' ஐயா, நான் பல இடங்களுக்கும் சென்று சிவ தர்சனங்களை செய்து கொண்டு இருக்கிறேன். அப்போது திருகோனீஸ்வரர் ஆலய மகிமையைக் கேள்விப்பட்டு இலங்கை வழியாக இங்கு வந்து கொண்டு இருந்தபோது அங்கு யாரோ ராவணன் எனும் மன்னனாம், அவரது தாயாரான கைகேசி என்பவர் அவரது மகன் ராவணன் கடலில் விழுந்து இறந்து விட்டான் என கேள்விப்பட்டு அப்படியே மயக்கம் அடைந்து விழுந்து மரணம் அடைந்து விட்டாளாம். அவளுக்கு திதிகளை செய்ய அவளுடைய பிள்ளை இல்லை என்பதினால் திருகோனீஸ்வரர்கடலில் திதி செய்வது பெரும் விசேஷம் என்றும், அங்கு சென்று அதை செய்தால் அவளது ஆத்மா நேரடியாக சொர்கத்துக்குப் போகும் என்று நினைத்த அவளது உறவினர்கள் திருகோனீஸ்வரர்ஆலயத்துக்கு வந்து கொண்டு இருந்த என்னிடம் அவளுக்கு திதி செய்யுமாறு கூறிவிட்டு அதற்கான தட்ஷணயையும் தந்தனுப்பினார்கள். ஆகவேதான் அவளுக்காக இதை இங்கு செய்தேன்' என்று கூறவும் அதைக் கேட்ட ராவணன் விக்கி விக்கி அழத் துவங்கினான். அவரை தேற்றிய அந்தணர் அவன் அழுவதற்கான காரணத்தைக் கேட்டார்.
ராவணனும் அவர் திதி செய்தது அவருடைய தாயாருக்குத்தான் என்று கூறிவிட்டு, தான் யார் என்பதையும், தன்னைப் பற்றியும் விவரமாக எடுத்துரைத்தப் பின் எவளுக்காக தான் அத்தனைக் கஷ்டப்பட்டு அந்த சிவலிங்கத்தை எடுத்துப் போக முயன்றேனோ, அவளே இல்லை என்ற பின், அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது எனக் கூறி அழுததைக் கண்ட அந்தணர் உருவில் இருந்த விஷ்ணுவும் அவனுக்காக பரிதாபப்படுவது போல பாசாங்கு செய்தப் பின் கூறினார் ' ராவணா, நீதான் கைகேசியின் மகன் என்பது தெரிந்து நான் மன ஆறுதல் அடைகிறேன். உன் தாயார் மீது உனக்குள்ள பாசமும், உன் தாயாருக்கு உன் மீது உள்ள பாசமும் இதில் இருந்து தெரியவில்லையா? நான் அவளுக்கு திதி கொடுக்க வந்த இடத்தில் நீயும் இருந்து அதைப் பார்த்துள்ளாய். போகட்டும், நல்லதே நடந்துள்ளது. நீ இந்த திருகோனீஸ்வரர் மலையின் மகத்துவத்தை அறிய மாட்டாய். இது குபேரன், அதாவது உன்னுடைய தம்பி முதல் அனைத்து தேவர்களும் இங்கு வந்து சிவபெருமானை வேண்டிக் கொண்டு யாகங்கள் செய்த இடம். இந்த ஆலயத்தின் அருகில் உள்ள கடலில் வந்து காரியங்களை செய்தால் இறந்தவர்கள் மோட்ஷம் அடைவார்கள். அதற்குக் காரணம் சிவபெருமானும், உமையும் இங்கே தங்கி இருப்பதினால் அந்த அருள் அவர்களது ஆத்மாக்களுக்குக் கிடைக்கிறது. மேலும் இங்கு வந்து தவம் செய்தாலோ, பூஜைகள் செய்தாலோ அதை விடப் பெரிய புண்ணியம் வேறு எங்கு செய்தாலும் யாருக்கும் கிடைக்காது. இங்கு பல யோகிகளும் முனிவர்களும் தவத்தில் இருக்கிறார்கள். இந்த மலையை சுற்றி பைரவர்களும், காளி தேவியும் காவலுக்கு உள்ளார்கள். இந்த மலையை சுற்றித்தான் சிவபெருமானின் மகனான கதிர்காமரும் தனது மனைவியோடு தங்கி இருக்கிறார்.அகத்திய முனிவர் போன்ற பெரும் முனிவர்கள் இங்கு வந்து சிவபெருமானை வணங்கி உள்ளார்கள். சிவபெருமானை தரிசிக்க பிரும்மாவும், விஷ்ணுவும் இங்கு அடிக்கடி வருவதுண்டு. இப்படிப்பட்ட சிறந்த இடத்தில் உன் தாயாருக்கு இறுதிக் கிரியை நடத்த பேறு பெற்றது உன் அதிருஷ்டமே. எந்த தாயாருக்காக நீ சிவலிங்கத்தை எடுத்துச் செல்கிறாயோ, அவளே இல்லை எனும்போது, அவளுக்கு கிரியை நடந்த இடத்தின் அருகில் அவள் சார்ப்பில் இதை இந்த ஆலயத்துக்கே தானம் செய்து விட்டு அவளுக்காக இறைவனை வணங்குவதே அவளுக்கு நீ செய்யும் மரியாதை ஆகும் ' என்று கூறினார்.
அவர் கூறியதை எல்லாம் கேட்ட ராவணன் உயிருடன் இல்லாத தாயாருக்காக இதை ஏன் கொண்டு செல்ல வேண்டும், அந்தணர் கூறியதே சரியானதாகும் என்று எண்ணிக் கொண்டு அதை அந்த அந்தணர் உருவில் இருந்த விஷ்ணுவிடம் ' அந்தணரே, நீர் கூறியதே சரியான வழி ஆகும். உம்முடைய அறிவுரையை நான் பரிபூரணமாக ஏற்றுக் கொள்கிறேன். இந்தாருங்கள். இதை என்ன செய்ய வேண்டுமோ அதன்படி என் தாயாரின் ஆத்மா சாந்தி அடைய நீங்கள் செய்யவும்' என்று கூறிவிட்டு அதை அவரிடம் கொடுக்க அவரும் அதை திருகோனீஸ்வரர் மலையின் வடக்கு திக்கில் ஒரு இடத்தில் பிரதிஷ்டை செய்து விட்டு, மீண்டும் அவனை அழைத்துக் கொண்டு போய் அவன் கையினாலேயே எள்ளும் தண்ணீரும் விட்டு தர்ப்பணம் செய்து வைத்து ஆலயத்துக்கு அழைத்துச் சென்று அவனை தானங்களை செய்யுமாறு கூறினார். ராவணனும் தனது தேரில் வைத்திருந்த பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் ஆலயத்துக்குள் இருந்த அனைத்து அந்தணர்களுக்கும் தானம் செய்தான். பாவம் அவனுக்கு அப்போது தெரியாது அங்கிருந்த அனைத்து அந்தணர்களும் விஷ்ணுவின் ஆலோசனைப் படி பல்வேறு அந்தணர்கள் வடிவில் வந்திருந்த பல்வேறு கடவுட்கள் என்பது.
பண்டைய காலத்தில் ஒவ்வொரு நாட்டை சேர்ந்த மன்னர்களும் பிற நாடுகள் மீது படையெடுத்து வந்து நாட்டை பெரிதாக்கிக் கொண்ட நிலையில் குளக்கோட்டான் மட்டும் இலங்கையில் இருந்த திரிகோணமலைக்கு வந்தது நாட்டைப் பிடிக்கும் ஆசையில் அல்ல, மாறாக திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை நிறுவுவதற்காகவே என்பதை அறியும்போது ஆச்சர்யமாகவே உள்ளது. ஆகவே குளக்கோட்ட மன்னன் யார், அவன் எப்படி வரலாற்று சிறப்பு மிக்கவன் ஆனான் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
முன்னொரு காலத்தில் இந்தியாவின் சோழ மண்டலத்தில் மனு நீதியை சேர்ந்த அரசர் ஒருவர் நல்லாட்சி செய்து வந்திருந்தார். அவர் பெயர் வரராமதேவர் என்பதாகும். அவர் பெரும் சிவபக்தர். அடிக்கடி அனைத்து இடங்களிலும் உள்ள சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் செய்து வந்தவர். மனுநீதி கண்ட சோழன் பரம்பரையில் வந்திருந்த வரராமதேவர் ஒருமுறை மச்சேந்திரபுராணத்தில் கூறப்பட்டு இருந்த கோணேசர் ஆலயத்தின் பெருமை பற்றி படித்து அறிந்து கொண்டார். ஆகவே அந்த ஆலயத்தில் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆவலால் உந்தப்பட்டு இலங்கைக்கு வந்து திருகோணேசரை தரிசனம் செய்து விட்டு சென்றார். ஆலயத்தில் வந்து திருக்கோணேஸ்வரரை வழிபட்டவர், அதன் மீது அதிக பக்தி கொண்டு அடிக்கடி அங்கு வரலானார். ஒவ்வொருமுறை அங்கு வந்தபோதும் அவர் பெரும் செல்வத்தை கொண்டு வந்து அந்த ஆலயத்தில் இருந்த கிணறு ஒன்றில் பாதுகாப்பாக வைத்து விட்டுச் சென்றார். அதற்குக் காரணம் எந்த காலத்திலாவது அந்த செல்வத்தைக் கண்டெடுப்பவர்கள் அந்த நிதி உதவியைக் கொண்டு அங்கு ஒரு ஆலயம் அமைக்கட்டும் என்ற ஆசையினால்தான். அவர் தானே அந்த ஆலயத்தை அமைக்க முடியாமல் இருந்ததின் காரணம், அவர் அங்கு வந்து வழிபட்ட நேரத்தில் அவருக்கு வாரிசு எதுவும் பிறக்கவில்லை. தான் ஒரு ஆலயத்தை அமைக்கத் துவங்கி தனக்கும் முடிவு காலம் வந்து விட்டால், அந்த ஆலயப் பணிகள் அப்படியே நின்று விடக் கூடும். மேலும் அந்நிய நாட்டில் இருந்த அந்த இடத்தில் ஆலயத்தை அமைக்க அந்த நாட்டில் இருந்த மன்னர்களின் ஆதரவு இல்லை என்றால், ஆலயப் பணிகளை மேற்கொள்ள முடியாது. ஆலயத்தை பாதுகாக்க தக்க படை பலம் தேவையாக இருக்கும். அந்த நேரத்தில் கலிங்க நாட்டுடன் இணைந்திருந்த அந்தப் பகுதியையும் ஆண்டு வந்த மன்னனோ சோழநாட்டு மன்னர்களுடன் நல்ல உறவு கொள்ளாமல் இருந்தவர்கள். ஆகவே அதையெல்லாம் கருத்தில் கொண்டே தனக்குப் பிறகு சோழ நாட்டை ஆளத் தகுதியானவர் வந்தால் மட்டுமே இப்படிப்பட்ட அந்நிய நாட்டில் வந்து ஒரு ஆலயத்தை அமைக்க முடியும் என்று எண்ணி செல்வத்தை மட்டும் அங்கு கொண்டு வந்து ரகசியமாக வைத்தார் .
அந்த காலங்களில் ஆலயம் எனக் கூறப்பட்டவை என்பது இப்போது உள்ள கோபுரத்தை போன்றக் கட்டிட அமைப்பைக் கொண்டவை அல்ல. திறந்த வெளிகளில் இருந்தவை. பல இடங்களிலும் இருந்த ஆலயம் என்பது அந்த காலங்களில் மேல்கூரை இல்லாமல், கட்டிடங்கள் இல்லாமல் பூமியில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த சில உருவங்களோடு இருந்த இடங்கள் ஆகும். அப்படி சுயம்பு விக்ரகங்கள் இருந்த இடங்கள் விசேஷமான சக்தி பெற்று இருந்தவை. தேவ லோகத்தினர் அமைத்தவை என்ற பரவலான நம்பிக்கைகள் உண்டு. அந்த நிலையைக் கொண்டதே பிரும்மா வடிவமைத்த, வாயு பகவானினால் எடுத்து வந்து வைக்கப்பட்ட தக்ஷிண கைலாய மலையில் அமைந்து இருந்த திருக்கோணேஸ்வரர் ஆலயமும் ஆகும். அங்கிருந்த ஆத்மலிங்கத்தை கோணேஸ்வரர் என அழைத்து வணங்கி வந்துள்ளனர். அப்போது திறந்த வெளியில் இருந்த ஆத்மலிங்கம் அமைந்திருந்த வனப் பிரதேசத்தையே ஆலயம் என அழைக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும். அதையே வழிபாட்டுத் தலமாக கடவுட்கள், யோகிகள், ரிஷி முனிவர்கள் என அனைவரும் கருதி அங்கு வந்து வழிபட்டார்கள். சிவபெருமானே ஆத்மலிங்கமாக அங்கு எழுந்திருந்ததினால் அங்கு வந்து அவரை வணங்கி வழிபட்டனர். அதுவே பின்னாளில் ஆலயமாக குளக்கோட்டான் எனும் மன்னனால் அமைக்கப்பட்டது என்கிறார்கள்.
மனுநீதி கண்டசோழ வரராமதேவர் அங்கு கொண்டு வந்து ரகசியமாக வைத்து விட்டுச் சென்று இருந்த அந்த செல்வங்கள் அனைத்தையும் அங்கிருந்த பூத கணங்கள் பாதுகாத்து வந்தன. இப்படி இருந்த காலத்தில் சோழ மண்டலத்தில் அரசாண்டு வந்த வரராமதேவருக்கு சிவபெருமானின் அருளினால் குளக்கோட்டான் பிறந்தார். குளக்கோட்டான் பிறந்ததின் காரணம் சிவபெருமானின் அருளே என முழுமையாக நம்பிய வரராமதேவர் மறைவுக்குப் பின்னர் ஆட்சியை அவர் ஏற்று இருந்த அவருடைய மகனான குளக்கோட்டான், ஒருமுறை பூத கணங்கள் மூலம் அவரது தந்தை சேமித்து வைத்திருந்த செல்வத்தைப் பற்றியும், திருக்கோணேஸ்வர சிவலிங்கத்தின் மகிமையும் தெரிந்து கொள்ள அவரும் அங்கு வந்து திருக்கோணேஸ்வரரை வணங்கலானார். அப்போது அவர் தனது தந்தையார் கிணற்றில் பதுக்கி வைத்து விட்டுச் சென்று இருந்த செல்வத்தை பூத கணங்களின் உதவியுடன் கண்டு பிடித்தப் பின், அந்த செல்வத்தைக் கொண்டே தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் பொருட்டு பிரும்ம லோகத்தில் உள்ளதைப் போன்ற அழகான ஒரு ஆலயத்தை நிர்மாணிக்க ஏற்பாடு செய்தார்.
ஆலயம் ஸ்தாபிக்க முடிவு செய்த உடன் அதற்கென சோழ நாட்டில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிட அமைப்பு தொழிலாளக் குடும்பங்களையும் வரவழைத்து அங்கு குடி அமர்த்தினார். தான் ஆலயம் அமைக்க இருந்தது அந்நிய தேசத்தில் என்ற பயமும் இல்லை, எண்ணமும் அவருக்கு ஏற்படவில்லை. பொற்குவியல் மூலம் கிடைத்தப் பணத்தைக் கொண்டு பல மாத காலம் பாடுபட்டு கோணேசர் ஆலயத்தில் மஹா மண்டபம், நுழைவு மண்டபம், உயர்ந்த கோபுரங்கள், திருமால் கோட்டம், அன்ன தான சத்திரம், மறைகளை ஓதுவார் மடம் ஆகியவற்றைபெரிய அளவில் அமைத்தார். அத்துடன் அங்கேயே அன்னை உமாதேவிக்கு ஒரு தனி ஆலயத்தையும் உருவாக்கி அதன் பாதுகாப்புக்காக அதை சுற்றி மதிலையும் கட்டினார் . மானிடப் பிறவியில் பெறும் பாவங்களை நீக்கிக் கொண்டு இறையருள் பெறப் பாவனாசம் எனும் ஒரு புனித தடாகத்தை அங்கேயே உருவாக்கி, சிவபெருமான் நீராடுவதற்கு என ஒரு தனியான மண்டபத்தையும் அமைத்தார். அத்தனை பக்தி அவருக்கு இருந்தது. கோணேசர் ஆலயத்தை தரிசிக்க வருகை தரும் முனிவர்கள், துறவிகள், அடியார்கள் போன்றோர்கள் தங்குவதற்கும் பெரும் மண்டபங்களையும் கட்டிடங்களையும் உருவாக்கினார்.
ஆலயத்தை மட்டும் நிறுவாமல் அதை அடுத்து பெரிய நீர்த் தேக்கத்தையும், திரிகோண மலையை தொட்டவாறு இருந்த தம்பலகமலம் பகுதியில் இருந்த வயல்களுக்கு தண்ணீர் தரும் நீர்பாசனத் திட்டத்தையும் அமைக்க எண்ணியவருக்கு அதை எப்படி செயல்படுத்துவது என்பது விளங்கவில்லை. காரணம் இரண்டு மலைப் பகுதியில் இருந்த இடத்தில் அதை நிறைவேற்ற அவரிடம் போதிய ஆள்பலமும் இல்லை, அதை எப்படி அமைப்பதென்ற திட்டமும் விளங்கவில்லை. அதுவும் போதாது என்று அந்த நேரத்தில் அவருக்கு ஒரு சிறிய சிக்கல் ஏற்பட்டது.
ஆலயம் வடிவமைக்கப்பட்டு வந்திருந்த நேரத்தில் கலிங்க தேசத்தை ஆண்டு வந்த மன்னனின் வாரிசாக பிறந்திருந்த ஆடகசௌந்தரி என்ற பெண் ராஜ்ய பரிபாலனத்தை ஏற்று இருந்தாள். அவள் அதிகாரத்தில் திரிகோணமலைப் பகுதியும் இருந்தது. ஆனால் அந்தப் பிரதேசம் வனப் பகுதியாக யாரும் அதிகம் செல்லாத பகுதியாக இருந்ததினால் அங்கெல்லாம் அரசுப் படையினர் இருப்பதில்லை. மேலும் இந்து சமயமும் அதிக அளவு அங்கு கால் ஊன்றி இருக்கவில்லை என்பதினால் ராவணன் வந்து வழிபட்ட தலம் , ரிஷி முனிவர்கள் வந்து தவம் உள்ள இடம் மற்றும் பிரும்மா அமைத்திருந்த இடம் போன்ற எந்த செய்திகளுமே அதிகம் மக்களின் கவனத்தில் போகாமல் இருந்திருந்த நேரமும் ஆகும். அந்த இடத்தின் மகிமையை அறிந்திருந்த சொற்ப அளவிலான மக்கள் மட்டும் அங்கு வந்து ரகசியமாக வழிபட்டவாறு இருந்தனர். இப்படி இருக்கையில்தான் அவள் அதிகாரத்தில் இருந்த பகுதியில் அவள் கட்டளையைப் பெறாமல் அந்நிய தேசத்து மன்னன் ஒருவன் வந்து பெரிய ஆலயம் அமைக்கின்றான்அவளுக்கு செய்தி கிடைத்தது. அதைக் கேள்விப்பட்டதும் அவள் உடனே தனது அமைச்சரை பெரும் படையுடன் அனுப்பி அந்த ஆலயத்தை இடித்து தள்ளி விட்டு வருமாறு அனுப்பினாள்.
ஆனால் திரிகோண மலைக்கு வந்த அவளது அமைச்சரோ, தேவலோகத்தைப் போலவே ஜொலித்த அங்கிருந்த நிலையைப் பார்த்து பிரமித்துப் போய், தனது அரசி செய்ய இருந்த தவறை உணர்ந்தார். அந்த தேவலோக ஆலயத்தை இடிப்பதை விட அந்த மன்னனையே தனது அரசிக்கும் கணவராக ஏற்பாடு செய்து விட்டால் நல்லது நடக்கும் , நாடும் வளம் பெரும் அல்லவா என நினைத்தார். அதை மனதில் கொண்டு இரு நாட்டு அரசர், அரசியிடமும் தூது போய் , நல்லவற்றை எடுத்துக் கூறி, நியாயத்தை எடுத்துரைத்து, தேவ காரியத்தை மனதில் கொண்டே எதுவும் செய்ய வேண்டும் எனப் பக்குவமாக எடுத்துரைத்து அவர்களுடைய திருமணம் நடைபெற ஏற்பாடு செய்தார். இப்படியாக குளக்கோட்டான் மற்றும் ஆடகசௌந்தரி இருவரின் திருமணமும் நல்ல முறையில் நடைபெற்று இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவும் வளர்ந்தது.
நாட்டின் வளத்தை நன்கு கவனிக்க வேண்டும் என்பதினால் அந்தப் பகுதியை வடக்கு, கிழக்கு மற்றும் மத்தியப் பகுதி என மூன்றாகப் பிரித்து அதை உப ஆளுநர்களைக் கொண்டு நிர்வாகித்து வரலானார். அப்படி அவர் ஏற்படுத்திய மத்தியப் பகுதியில் இருந்ததே இன்னொரு திருக்கோணேஸ்வரர் ஆலயம் அமைந்த தம்பலகமலம் எனும் ஊரும் ஆகும். தம்பலகாமம் கிராமத்துள் கால் பதித்ததும், நம் கண்ணில் முதலில் படுவது, பார்க்குமிடமெங்கும் காலத்துக்கும் பசுமை நிறைந்து மரகதக் கம்பளம் விரித்தது போலத் தோற்றமளிக்கும் பச்சை பசேல் என்ற வயல்வெளிகள், பூத்துக் குலுங்கும் நெற்கதிர்கள் , அதை சுற்றிலுமே தண்ணீர் தேங்கி நிற்கும் பெரும் குளமாகவும் அந்த பிரதேசம் காட்சி தரும்.
தான் அழைத்து வந்து குடியேற்றியவர்கள் ஆலய பரிபலனங்களை நெறி முறை தவறாமல் செய்து கொண்டு இருந்ததைக் கண்டு ஆனந்தம் அடைந்து வாழ்ந்து கொண்டு இருந்தபோது ஆடகசௌந்தரி கர்பமுற்று ஒரு நல்ல பிள்ளையைப் பெற்றெடுத்தப் பின், சில காலத்தில் அவள் மரணம் அடைந்து விட்டாள். அதனால் குளக்கோட்டான் வருத்தம் அடைந்தாலும் அவன் மனதில் ஒரு பயம் தோன்றியது. தாம் இவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கிய ராஜ்யத்தில் உள்ள ஆலயத்தை தன் காலத்துக்குப் பிறகும் நன்கு பராமரிக்க வேண்டுமே என்ற பயமே அது. அதனால் தான் சோழ மன்னனாக இருந்தாலும், தனக்கு கீழ் இருந்த பாண்டிய மன்னர்களில் ஒரு இளவரசரை அங்கு வரவழைத்து அவருக்கு பூபாலவன்னிபம் என்ற சிறப்புப் பட்டதைத் தந்து அவரையும் தன் மகனுடன் சேர்த்து தன் ராஜ்யத்தை பரிபாலனம் செய்ய ஆட்சியில் அமர்த்தியப் பின் தான் உலக வாழ்க்கையில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.
ஆன்மீக வாழ்வில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சில காலம் வாழ்ந்திருந்த அவர் ஒரு நாள் மரணம் அடைந்தார். ஆனால் அது மரணம் என அழைக்கப்பட மாட்டாது என்பதற்கு வாய் மொழிக் கதை ஒன்று கூறப்படுகிறது. பெரும் சிவபக்தராகவும் , தேவர்களுக்கு பிரியமானவராக இருந்தவரும், நல்ல உள்ளம் படைத்தவருமான அவர் ஒருநாள் ஆலயத்துக்குள் சென்று கருவறையில் நுழைந்து கதவை மூடக் கொண்டார். அப்படியாக அதற்கு முன்னர் அவர் பல முறை செய்தது உண்டு. கருவறையை மூடிக் கொண்டு பூஜை செய்தப் பின் வெளி வருவார். ஒருநாள் அப்படிப்பட்ட நிலையிலேயே கருவறைக்கு உள்ளே சென்றவர் சிவபெருமானிடம் தன்னை அவர் பாதத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என வேண்டிக் கொண்டார். வெகு நேரம் ஆகியும் குளக்கோட்டான் வெளியில் வரவில்லையே, எந்த விதமான பூஜை செய்யும் ஓசையும் வரவில்லையே என கவலைக் கொண்டவர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது, அங்கு குளக்கோட்டான் காணப்படவில்லை. மாறாக சிவனார் பாதத்தின் அடியில் புத்தம் புதிய தாமரை மலர் மலர்ந்து கிடந்ததைக் கண்டார்கள். அவரை ஆலயத்திலும் வேறு எங்குமே காணவில்லை. மூடிய கருவறைக்குள் புத்தம் புதிய தாமரை மலரும் திடீர் எனத் தோன்றிய அதிசயமும் யாருக்கும் விளங்கவில்லை. ஆனால் மெத்தப் படித்த பண்டிதர்கள் மூலமே நடந்த உண்மையை அறிந்து கொண்டார்கள். குளக்கோட்டான் தேவர்களில் ஒருவராகவே இருந்து மானிட உடலை எடுத்து இந்த ஆலயத்தை நிர்மாணிக்க வந்திருந்தார் என்றும், வந்த காரியம் முடிந்தப் பின் தேவ லோகத்துக்கு சிவன் பாதம் மூலம் சென்று விட்டார் என்றும் அதனால்தான் அவர் உடலை அங்கு காணவில்லை என்றும் ஒரு நம்பிக்கை மீதான கதை உள்ளது.
முன்னர் கூறியபடி திரேதா யுகத்தில் ராவணன் இந்த ஆலயப் பகுதியில் வந்திருந்தபோது, மரணம் அடைந்துவிட்ட அவனுடைய தாயாருக்கு கர்மாக்களை அந்தணர் உருவில் இருந்த விஷ்ணுவின் மூலம் செய்தான். அப்போது விஷ்ணு பகவான் அவனுக்கு அந்த தலத்தின் பெருமைகளை எடுத்துரைத்துக் கொண்டு இருந்தபோது அங்கு ஏழு இடங்களில் தனது தடியினால் தட்டி ஏழு சுனைகளை எழுப்பினார். அதைக் கண்ட ராவணன் வந்துள்ளவர் விஷ்ணு என்பதை அறிந்து கொள்ளாமல் ஒரு அந்தணருக்கு அத்தனை மகிமை உள்ளதா என வியந்தான். பாதாளத்தில் இருந்து எழுந்திருந்த அந்த ஏழு சுனைகளையே விஷ்ணு பகவான் உருவாக்கிய கன்னித் தீர்த்தம் என்கிறார்கள் . அதன் கரையில் இறந்து போன ஆத்மாக்களுக்குப் பிண்டம் இடுவது கங்கையில் பிண்டம் வைப்பதை விட மேலும் சிறப்பானதாகும் என்று கருதப்படுகிறது என்பதற்குக் காரணம் அங்குதான் ராவணனின் தாயாருக்கு ராவணனை பிண்டம் இட வைத்து விஷ்ணு பகவானே அதற்கான கர்மாக்களை ஒரு அந்தணர் உருவில் நடத்தினார் என்பதே. அந்த ஆலயப் பகுதி முழுவதிலுமே உள்ள அனைத்துமே - கட்டிடங்கள், குளங்கள், மண்டபங்கள் என - கட்டி முடிக்கப்பட்ட அனைத்துமே தேவ கணங்களுடன் மனிதர்கள் சேர்ந்து செய்தவை என்பதினால் மேலும் அந்த இடம் சிறப்பு மிக்க ஒன்றாக அமைந்தது.
இந்த நிலையில் பல ஆண்டுகள் கழிந்தன. 1500 ஆண்டு இறுதி கட்டவாக்கு மற்றும் 1600 ஆம் ஆண்டு துவங்கியபோது, போர்த்துகீசியர் - அவர்கள் பறங்கியர் என கூறப்பட்டனர்- தமது நாட்டை விரிவு படுத்திக் கொள்ளும் நோக்கிலும் தமது மதத்தைப் பரப்பும் நோக்கிலும் இலங்கை மீது படையெடுத்து வந்தார்கள். வந்தவர்கள் கண்களில் திருகோணமலைப் பிரதேசத்து ஆலயம் கண்களில் பட்டுவிட அதைக் கண்டு பொறாமைக் கொண்டார்கள்.
முதல் பராந்தக சோழ மன்னன் என்பவனுக்கு அஞ்சி தன் நாட்டில் இருந்து தப்பி இலங்கைக்கு பாதுகாப்புக்காக வந்திருந்த ஒரு பாண்டிய மன்னன் தம்பலகமத்தில் திருப்பணிகள் செய்ததாக சில வரலாற்றுக் குறிப்புக்கள் உள்ளன. அதன் பின் இந்தியாவில் திருப்பதியில் உள்ள ஆலய கோபுரக் கலசங்களை தங்கத் தகட்டில் அமைத்த ஜடவர்ம வீர பாண்டியன் என்ற அதே மன்னனே திருக்கோணீ ஸ்வரர் ஆலய கோபுரக் கலசங்களையும் தங்கம் மற்றும் வெள்ளித் தகட்டினால் அலங்கரித்தான் என்றும் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன . அவரைத் தவிர வேறு பல்லவ மன்னர்களும் இந்த ஆலயத்தின் மேன்மையை அறிந்து கொண்டு அதற்கு நிறைய நிதி உதவி செய்துள்ளார்கள். இந்த ஆலயத்தில் ஆயிரம் தூண்கள் இருந்தது என்றும் வானளாவிய அளவில் அது கட்டப்பட்டு இருந்தது என்றும் கூறுவார்.
இந்த நிலையில்தான் மேற்கு நாட்டில் இருந்த போர்த்துகீசியர்கள் வர்த்தகம் செய்ய ஆசைக் கொண்டு கிழக்குப் பகுதிகளுக்கு விஜயம் செல்லத் துவங்கினார்கள். அந்த காலகட்டத்தில் கிழக்குப் பகுதிகளில் பல நாடுகளில் அரசியல் ஸ்திரத் தன்மை இல்லாமல் இருந்தது. ஆகவே எங்கெல்லாம் அரசியல் ஸ்திரத் தன்மை இல்லாமல் இருந்தனவோ அங்கெல்லாம் இருந்த அந்த நாட்டின் மீது படையெடுத்து அந்த நாடுகளைக் கைப்பற்றிக் கொண்டே வந்த போர்த்துகீசியர்கள் இலங்கை மீதும் படையெடுத்து இலங்கையைக் கைப்பற்றினார்கள். அப்போது இந்த திருகோணமலைப் பிரதேசமும் அவர்கள் கையில் விழுந்தது. இந்த ஆலயத்தைக் கண்ட போர்த்துகீசியர் பிரமிப்பு அடைந்தார்கள். வானளவு உயரமான கோணீஸ்வரர் ஆலயம் அவர்களது கண்களை உறுத்தியது.
அது மட்டும் அல்ல அந்த இடத்துக்கு பெருமளவிலான மக்கள் பல பிரதேசத்திலும் இருந்து வந்து வழிபட்டுக் கொண்டு இருந்ததும், பல மன்னர்களின் ஆதரவினால் அந்த ஆலயம் பெரும் செல்வம் நிறைந்த ஆலயமாக இருந்ததையும், பெரும் புகழ் பெற்று இருந்த அந்த இடமே இந்து சமயத்தின் கடற்கரை விளக்கு போல அமைந்து இருந்ததையும் கண்டு பொறாமைக் கொண்டார்கள். இந்த ஆலயம் இருக்கும்வரை தம்முடைய சமயம் அங்கு தழைத்தோங்க முடியாது என்பதையும் உணர்ந்து கொண்டார்கள். ஆகவே அந்த ஆலயத்தின் செல்வத்தைக் கொள்ளையடித்து அந்த ஆலயத்தை தரை மட்டமாக்க முடிவு செய்து அதற்கான நாளையும் குறிப்பிட்டார்கள். ஆனால் அதை நேரடியாக செய்ய முடியாத அளவு ஆலயம் பாதுகாப்பாக இருந்து வந்திருந்தது. ஆலயத்தின் தினசரி பூஜைகளைத் தவிர பல வருட உற்சவங்களும் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.
இந்த நிலையில் 1624ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தன்று எப்போதும் போல ஸ்வாமியை ஊர்வலமாக நகரில் எடுத்துச் சென்று வலம் வரும் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக மாதுமை அம்பாள் (பார்வதி தேவி) சமேத திருக்கோணேச்சரப் பெருமான் திருவுலாவாக அடியார்களுடன் கோயிலிலிருந்து கிளம்பி நகருக்கு எழுந்தருளினார். அந்த தருமனத்தையே எதிர்பார்த்திருந்த போர்த்துக்கேயப் படை வீரர்கள் பிராமணர்கள் போல வேடம் தரித்து ஆலயத்துக்குள் ஸ்வாமி தரிசனம் செய்யப் போவது போல பாசாங்கு காட்டி விட்டு கோவிலுக்குள் புகுந்தார்கள். அதாவது திருகோணேச்சரப் பெருமான் திருவுலாவுக்கு எழுந்தருளிய பின்னரே போர்த்துக்கேயர் கோவிலுக்குள் புகுந்தனர். அந்த நேரத்தில் கோயிலின் உள்ளே பூசாரிகள் சிலரும் ஆலய வேலையாளரும் மட்டுமே இருந்தார்கள்.
கொன்ஸ்தந்தைன் டீசா என்ற போர்த்துகீசிய தளபதியின் தலைமையில் ஆலயத்துக்கு உள்ளே நுழைந்த படையினர் உள்ளே நுழையும் போது தம்மை எதிர்த்தவர்களை எல்லாம் வெட்டிக் கொன்று விட்டு கோயிலிலிருந்த தங்க வெள்ளி நகைகளையும் விலை மதிப்புமிக்க பிற பொருள்களையும் சூறையாடிக் கொண்டு சென்றனர். அதுமட்டும் இல்லாமல் மீண்டும் பீரங்கிகளுடன் அங்கு வந்த போர்துகீசியப் படையினர் அந்த கோயிலை முற்றிலுமாக இடித்து அழித்தனர்.
அதற்கு சில நாட்களுக்கு முன்னர் அங்கு வந்திருந்த ஒரு போர்துகேசியப் படை தளபதி ஒருவன் அந்த ஆலயக் கட்டுமானத்தின் அழகைக் கண்டு பிரமித்துப் போய் ஒரு ஓவியரை வரவழைத்து அந்த ஆலயத்தின் தரைப் படத்தை வரைந்து கொண்டார் என்றும் அந்தப் படம் போர்த்துகீசிய நாட்டு கலை அரங்கில் உள்ளதாகவும் ஒரு செய்தி உள்ளது. அந்த வரை படத்தின் மூலம்தான் போர்த்துகீசியர் அழித்த கோயிலில் ஆயிரங்கால் மண்டபமும் பெரியதொரு தீர்த்தக்கேணியும் பிற மண்டபங்களும் இருந்தன என்பது தெரிய வந்தது. கொன்ஸ்தந்தைன் டீசா செய்த சிவ துரோகத்துக்காக அவன் 1630ம் ஆண்டு வேறு சிலர் செய்த சூழ்ச்சியில் அகப்பட்டுக் கொல்லப்பட்டான் என்பதும் ஒரு வரலாறு.
அந்த நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட சிவனடியார்கள் அந்த கலவரத்தில் உடைக்கப்பட்டு இருந்த பின்புற மதில் சுவர் வழியே உள்ளே புகுந்தார்கள். நேராக கர்பக் கிரகத்துக்குச் சென்று அங்கிருந்த மூர்த்தியை அடியோடு பெயர்த்துக் கொண்டு பின் வாயில் வழியே வெளியேறி தம்பலகமத்தை நோக்கி ஓடினார்கள். நல்லவேளையாக போர்த்துகீசியர் இருட்டான நேரத்தில் ஆலயத்துக்குள் வந்திருந்ததினால் சிவ பக்தர்களினால் விக்ரகங்களை எடுத்துக் கொண்டு ஓடுவது எளிதாக இருந்தது. மேலும் அவர்களுக்கு அனைத்துப் பாதையும் அத்துப்படி என்பதினால் அவற்றை எடுத்துக் கொண்டு இருண்ட கானகம் வழியே ஓடினார்கள்.
இப்படியாக ஒரு பிரிவினர் வீரத்துடன் தமது உயிரையும் லட்சியம் செய்யாமல் ஆலய விக்கிரகங்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதைக் கண்ட மேலும் சிலர் இன்னும் சில விக்ரகங்களை ஆலயத்துக்குள் இருந்து எடுத்துக் கொண்டு இன்னொரு பாதையில் ஓடினார்கள். இரண்டு பிரிவுகளாக பிரிந்து ஆலய விக்ரகங்களை பாதுகாப்பதில் ஈடுபட்டிருந்த சிவபக்தர்களுடைய குறிகோள் ஒன்றுதான். உயிரைக் கொடுத்தாவது அத்தனை பழைமையான தாம் அதுகாலம் வரை வழிபாட்டு வந்திருந்த விக்ரகங்களை போர்த்துகீசியர் கைகளில் சிக்க விடக் கூடாது என்பதே ஆகும். முதலில் கோணேஸ்வரர் மூர்த்தியை எடுத்துக் கொண்டு தம்பலகமத்தின் மேற்குப் பகுதியை நோக்கி ஓடியவர்கள் அங்கிருந்த உயரமான மலைப் பிரதேசத்தில் ஒரு இடத்தில் அதை கொண்டு போய் மறைத்து வைத்து அங்கேயே அதை வழிபடலானார்கள். அதுவே முதல் திருகோணேஸ்வரர் ஆலயத்தில் இருந்து வளர்ந்த இரண்டாவது திருகோணேஸ்வரர் ஆலயமாக பின்னர் உருவெடுத்தது.
அதே சமயத்தில் ஆலயத்தில் இருந்து போர்த்துகீசியர் கைகளில் சிக்காமல் பாதுகாப்பாக எடுத்து வந்து விட்ட விக்ரகங்களை எடுத்துச் சென்ற இரண்டாவது பிரிவினர் அவற்றை எங்கு பாதுகாப்பாக வைப்பது எனப் புரியாமல் திண்டாடிக் கொண்டு தாம் கொண்டு சென்ற கடவுட் சிலைகளை அங்காங்கே இருந்த கிணறுகளில் போட்டு மறைத்தும், பூமியில் புதைத்து வைத்து விட்டும் ஓடினார்கள். அந்த சிலைகளே மீண்டும் பல காலம் பொறுத்து மீண்டும் புதுப்பிக்கப்பட்ட முதல் திருகோணேஸ்வரர் ஆலயத்தில் இன்றும் உள்ளவை ஆகும். கிணற்றிலும், பூமிக்கு அடியிலும் புதைத்து வைக்கப்பட்டு இருந்த சிலைகளை அங்கிருந்த இடிபாடுகளை அகற்றி ஆலய நிர்மாணப் பணியினை பல காலம் பொறுத்து மேற் கொண்ட பக்தர்கள் கண்டு பிடித்தார்கள். அன்றைக்கு சிவபக்தர்கள் இடிக்கப்பட்ட ஆலயத்தில் இருந்து சிலைகளை எடுத்துச் சென்று இருக்காவிடில் புராதான சரித்திர புகழ்ப் பெற்ற அந்த சிலைகள் அனைத்தையும் போர்த்துகீசியர் சிதைத்து அழித்திருப்பார்கள். அதே நேரத்தில் திருவிழா ஊர்வலம் சென்றிருந்த பக்தர்களுக்கும் ஆலயம் அழிக்கப்பட்ட செய்தி கிடைத்ததும், அவர்களும் அவர்கள் கொண்டு சென்றிருந்த சிலைகளை திரும்ப ஆலயத்தில் கொண்டு வராமல் ஆலயத்துக்கு அருகிலேயே மறைத்து வைத்தார்கள் .
போர்த்துக்கேயர் கி.பி. 1624 ஆம் ஆண்டு கோணேசர் ஆலயத்தை அழிக்கும் முன் அந்த ஆலயத்தைக் குறித்த அனைத்து தகவல்களையும் எடுத்துள்ளனர். போர்த்துக்கேய தளபதியான கொன்ஸ்ரன்ரைன் டீசா என்பவனே ஆலயத்தை அழித்தவன். ஆலயம் அழிக்கப்படும் முன்னர் அவர்கள் எடுத்திருந்த வரைபடங்கள், குறிப்புகள், கட்டிடப் படங்கள் ஆகியன கோணேசர் ஆலயத்தைப் பற்றிய செய்தியை விவரமாக அறிந்து கொள்ள பெரிதும் உதவுகின்றன. அவனது குறிப்புகளில் அழிக்கப்பட்ட அந்த ஆலயத்தின் பரப்பளவும் கூறப்பட்டு இருந்தன . அவன் எழுதி வைத்திருந்த குறிப்பின்படி அந்த காலத்தில் தற்போது ஆலயம் இருக்கும் பகுதி முழுவதுமே அங்கிருந்த ஆலயத்தின் பகுதியாகவே காணப்பட்டுள்ளது என்பதைப் போர்த்துக்கேயரின் பதிவேடுகளிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது .
போர்த்துகீசியர் ஆலயத்தை இடித்தப் பின் சில காலம் பொறுத்து, அதாவது கி.பி. 1639 ஆம் ஆண்டுவாக்கில் டச்சுக்காரர்கள் இலங்கை மீது படையெடுத்து வந்து இலங்கையைக் கைப்பற்றி திருகோணமலையையும் கைப்பற்றினார்கள். அவர்கள் போர்துகீசியரினால் இடிக்கப்பட்டிருந்த கோணேசர் ஆலயத்தில் மீதி இடிபடாமல் இருந்த தூண்களை இடித்துத் தங்களுடைய கோட்டையைக் கட்டி அங்கிருந்த பல பகுதிகளுக்கும் டச்சுப் பெயர்களையும் சூட்டினார்கள். அவர்களும் இந்து மதத்துக்கு எதிரானவர்களாக இருந்ததினால் அங்கு இருந்த ஆலயங்கள் எதற்குமே செல்வதற்கும், வணங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது என்பதினால் கோணேசர் பக்தர்கள் வேறு வழி இன்றி ரகசியமாக அங்கிருந்த ஆலயப் பகுதிக்கு சென்று வணங்கி வந்தார்கள்.
இன்னமும் சில காலம் கழிந்ததும், கி.பி. 1795 ஆம் ஆண்டு அங்கு படையெடுத்து வந்த ஆங்கிலேயர் வசம் திருகோணமலை கோட்டை வீழ்ந்தது. ஒருவிதத்தில் அது பக்தர்களுக்கு நன்மையாகவே அமைந்து இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இடிக்கப்பட்டிருந்த அந்த ஆலயத்துக்கு சென்று வணங்குவது தடை செய்யப்படவில்லை. மக்கள் இடிபட்டு இருந்த அந்த ஆலயத்துக்கு சென்று தரிசிப்பதை ஆங்கிலேயர் தடுக்காது மக்கள் மன உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்துள்ளார்கள். கி.பி. 1803 ஆம் ஆண்டு கோயில் இருந்ததாகக் கருதப்படும் சுவாமி மலையில் இந்துக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறான சூழ்நிலையில் உலகப் போர் மூண்டது உலகம் முழுவதும் பல நாடுகள் சுதந்திரம் அடைந்தன. ஆங்காங்கே ஆட்சி செலுத்தி வந்து கொண்டு இருந்த ஆங்கிலேய அரசாங்கம் தமது ஆட்சியை விளக்கிக் கொண்டு தத்தம் நாட்டிற்கு சென்றார்கள். இதன் பின்னணியில் 1948 ஆம் ஆண்டு இலங்கையும் சுதந்திரம் பெற்றது. போர்த்துகீசியர் ஆலயத்தை அழித்தபோது சிவபக்தர்கள் ஆலயத்தில் இருந்த விக்கிரகங்களை நாலாபக்கமும் எடுத்துச் சென்று புதைந்திருந்தார்கள் என்று முன்னர் கூறினேன் அல்லவா. அப்படி புதைக்கப்பட்டு இருந்த பிள்ளையார், சிவன், பார்வதி, விஷ்ணு மற்றும் வேறு கடவுட்களின் சிலைகளை பூமியிலிருந்து கிணறு வெட்டும் பொழுது கண்டெடுத்தார்கள். பக்தர்கள் ஒன்றிணைந்து மீண்டும் இடிபட்டு அழிக்கப்பட்டு இருந்த அதே ஆலய பகுதியில் கோணேசர் ஆலயத்தை மீண்டும் புனரமைத்து 1963 ஆம் ஆண்டு கும்பாபிஷேகமும் நடத்தினார்கள்.
இப்படிப்பட்ட புகழ் பெற்ற ஆலயத்தின் மகிமை இன்னும் பல உள்ளன. அதுவும் தம்பலகமத்தின் இருந்த ஆலயம் குறித்து சிலர் பெற்ற அனுபவத்தைப் படிக்கும்போது மயிர்க்கூச்சல் எடுக்கும் வகையில் உள்ளது .
அந்த வனப் பிரதேசங்களில் வேட்டை நாய்களின் துணை இல்லாமல் வேட்டை ஆடப் போகமாட்டார்கள் என்பதின் காரணம் வேட்டை நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகம் என்பதினால் ஈரத் தரைகளில் வயல்களில் இருந்து ஓடிச் செல்லும் காட்டு மான்களின் பாத சுவடுகளை பின்பற்றிச் சென்று அவை ஒளிந்துள்ள இடத்தைக் கண்டு பிடித்து கொடுக்கும். அவற்றை வேட்டையாடுபவர்கள் தமது துப்பாக்கிகளினால் சுட்டு மிருகங்களை எடுத்து வந்து உண்பார்கள். அதில் ஒரு சிக்கல் என்ன என்றால் காட்டு மான்களின் பாத சுவட்டை தவற விட்டு விட்டு விட்டால், திரும்ப வழி தெரியாமல் வனத்தில் சிக்கிக் கொள்ள வேண்டியதுதான். ஆகவேதான் வேட்டை நாய்களுடன் மட்டுமே போவார்கள். அந்த நாய்களுக்கு மட்டுமே போகும் வழியும் திரும்ப வரும் வழியும் நன்கு தெரியும். மேலும் அப்படி வேட்டைக்குச் செல்பவர்கள் தனியாக செல்ல மாட்டார்கள். ஒரு குழுவாக ஒன்று சேர்ந்தே செல்வார்கள். இதுதான் அங்கிருந்த மக்களின் பொதுவான வாழ்கை நிலையாக இருந்து வந்துள்ளது.
போர்த்துகீசியர்கள் கோணேஸ்வரர் ஆலயத்தை இடித்து விட்டுச் சென்றபோது அங்கிருந்த பக்தர்கள் மூல மூர்த்தியை இரவோடு இரவாக எடுத்துக் கொண்டு தப்பிச் சென்று தம்பலகமத்தில் இருந்த கழனி மலை என்ற ஒரு ஒரு மலை உச்சியில் வைத்து ரகசியமாக வழிபட்டார்கள். அதன் பின் அந்த பக்தர்களும் எங்கேயோ சென்று விட்டப் பின் அல்லது மரணம் அடைந்து விட்டப் பின் அந்த ஆலயம் இருந்த இடம் யாருக்குமே தெரியாமல் இருந்தது. பல காலம் பொறுத்து அந்த ஆலயம் இருந்த இடத்தைக் கண்டு பிடிக்க பலரும் பெரும் அளவிலான முயற்சி செய்து ஆலயம் இருந்ததாக கூறப்பட்ட மலை சிகரத்தை மட்டுமே, அதுவும் வெகு தொலைவில் இருந்து மட்டுமே கண்டு பிடித்தார்கள். ஆனால் எவராலும் அந்த ஆலயத்தைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை. அதற்குக் காரணம் அந்த மலை உச்சிக்குப் ஏறிப் போவதும் மிகக் கடினம், பாதையும் விளங்காமல் இருந்தது என்பதே. ஆகவே அந்த ஆலயத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் அநேகமாக அனைவருமே தோல்வியுற்று அதை மறந்தும் விட்டிருந்தார்கள். அப்படிப்பட்ட காலத்தில்தான் ஒரு சிவபக்தருக்கு ஒரு அதிசய அனுபவம் அந்த காட்டுப் பிரதேசத்தில் காட்டு மான் வேட்டை ஆடச் சென்றபோது நேரிட்டதாம் . இந்த சம்பவத்தை சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்மஜோதி என்ற ஒரு புத்தகத்தில் கழனி மலையில் நடந்த அற்புதம் என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்தார்கள். அதன் அடிப்படையிலேயே இந்த சம்பவமும் எழுதப்படுகிறது.
மயில்வாகனார் எனும் ஒரு சிவபக்தர் ஒருநாள் மதியம் தனது நண்பர்களுடைய வற்புறுத்தலின் காரணமாக அந்த அடர்ந்த வனத்துக்கு வேட்டை ஆடச் சென்று இருந்தபோது அடர்ந்த காட்டு மத்தியில் வழியையும், நண்பர்களையும் தவற விட்டு விட்டு எங்கோ சென்று விட்டார். எங்கு சென்று விட்டோம் என்பதும் அவருக்கு தெரியவில்லை. அவர் எங்கோ சென்று விட்டிருந்ததும் வேட்டையில் மும்முரமாக இருந்த அவருடைய நண்பர்களுக்கு தெரியவில்லை. அதனால் மயில்வாகனனார் எத்தனைக் குரல் எழுப்பியும் அவரால் அவர் நண்பர்களையோ அல்லது வேட்டை நாயையோ அருகில் அழைக்க முடியவில்லை. இருட்டத் துவங்கியதும் பயமாகி விட்டது. அங்காங்கே காட்டு விலங்குகளின் ஓசையும் பயத்தை அதிகப்படுத்த என்ன செய்வது என முழித்துக் கொண்டு இருந்தவர், ஒரு உயரமான மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டார். பசியும் வயிற்றைக் கிள்ளத் துவங்கியது. நாடு ஜாமம் ஆகியது.
பயத்தினால் சிவபெருமானின் நாமத்தை உச்சரித்தபடியே மரத்தின் மீது அமர்ந்திருந்தவர் தன்னை மறந்து கண் அயர்ந்தார். அப்படியே மரத்தின் மீது அமர்ந்து இருந்தவர் திடீர் என மத்தள ஓசையைக் கேட்டு முழித்தார். தூரத்தில் சிலர் மத்தளத்தை அடித்தவாறும், கையில் விளக்குகளுடன் அந்த மரத்தின் பக்கமாக வந்து கொண்டு இருந்தார்கள். அவருக்கு சற்று உயிர் வந்தது. அவர்களை உதவி கேட்டு தன் ஊருக்கு செல்லலாம் என நினைத்தவாறு அந்த ஊர்வலம் மரத்தின் அருகில் வந்ததும் அவசரம் அவசரமாக கீழே இறங்கினார். கீழே இறங்கியவர் அதிசயித்து நின்றார். அந்த மனிதர்கள் பொன் மேனியுடன் இருந்தார்கள். யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. மெளனமாக எதோ உச்சரித்தபடியே நடந்து கொண்டு இருந்தார்கள். அவர்களிடம் பேச்சுக் கொடுக்க மயில்வாகனனார் முயன்றாலும் அவர்கள் அவரை லட்சியமே செய்யாமல் நடந்து கொண்டு இருந்தார்கள். ஆகவே வேறு வழி இன்றி எங்குதான் செல்கிறார்கள் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டு அவர்களை பின் தொடர்ந்து சென்றார்.
அவர்கள் அனைவரும் காட்டின் மத்தியில் அமைந்து இருந்த ஒரு ஆலயத்தில் நுழைந்தார்கள். அவரும் அதில் நுழைந்தார். என்னே அவர் கண்ட அந்தக் காட்சி!! ஆலயத்தில் இருந்த சிவலிங்கத்தை பூஜித்துக் கொண்டு இருந்தார் ஒருவர். அனைவரும் அந்த பூஜையில் பக்திபூர்வமாக கலந்து கொண்டார்கள். மயில்வாகனனாரும் அந்த பூஜையில் கலந்து கொண்டார். பல மணிநேரம் பூஜை நடந்தது. பூஜை முடிந்ததும் பூஜை செய்தவர் அனைவருக்கும் திருநீறு, சந்தனம் என பிரசாதத்தை தந்தப் பின் உண்ணவும் அன்னப் பிரசாதம் தந்தார் . பசியால் துடித்தவர் அந்த அன்னப் பிரசாதத்தை அதிகமாகவே பெற்றுக் கொண்டு மறைவிடத்தில் சென்று அமர்ந்து கொண்டு அதை உண்டு முடித்தப் பின், அயர்ச்சியினால் மீண்டும் தன்னை மறந்து அங்கேயே உறங்கி விட்டார். விடிகாலை வந்ததும் திடீர் என கண் விழித்து எழுந்தார். எழுந்தவர் அந்த ஆலயத்தில் முன் இரவில் தான் பார்த்த யாரையுமே காணாமல் திகைத்தார். தீபம் மட்டும் ஆலயத்தில் எரிந்து கொண்டு இருந்தது.
பயந்து போய் வெளியில் ஓடி வந்தவர் அங்கும் யாரையும் காணாமல் திகைத்தார். நல்ல வேளையாக முதல் நாள் இரவில் தனக்கு பிரசாதம் கொடுத்தவரிடம் தனது நிலையை சுருக்கமாகக் கூறி திரும்பிச் செல்லும் வழியைக் கேட்டபோது அவருக்கு செய்கை மூலம் மட்டுமே அவர் செல்ல வேண்டிய பாதையை காட்டி இருந்தார். ஆகவே நன்கு விடிந்ததும், பூஜை செய்த அர்ச்சகர் கூறிய வழியில் செல்லத் துவங்கினார். ஆனால் தான் கண்ட அந்த ஆனந்தமான காட்சியையும், ஆலயத்தையும் குறித்து அனைவருக்கும் காட்ட வேண்டும் என நினைத்தவர் திரும்பிப் போகும்போது பாதையை அடையாளம் காட்டும் விதமாக இருக்கட்டும் என மரக் கிளைகளை உடைத்து அதில் இருந்த பச்சை இலைகளுடன் கூடிய கிளைகளை பத்து அடிக்கு ஒன்றாக பூமியில் பாதை நெடுங்கிலும் நட்டுக் கொண்டே சென்றார். அவர் சென்று கொண்டிருந்த பாதை எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தது. நல்ல வேளையாக சில மணி நேரம் நடந்தப் பின் கவலைக் கொண்டு அவரை தேடிக்கொண்டு இருந்த நண்பர்களை சந்திக்க நேரிட்டது. அவர்களிடம் நடந்த அத்தனை விஷயத்தையும் கூற, அதைக் கேட்டவர்களும் வியந்து நின்றார்கள். அவர்களும் அந்த ஆலயத்தைக் காண விருப்பத்தை தெரிவிக்க அவர்களுக்கும் அந்த ஆலயத்தைக் காட்டுவதாகக் கூறிவிட்டு அவர்களை அழைத்துச் சென்றார். அவர் நெற்றியில் காணப்பட்ட சந்தனத்தின் மணமும், வீபுதியும் அவர்களை அவர் கூறியதை நம்ப வைத்தது.
1950 ஆம் ஆண்டில் அழிக்கப்பட்டிருந்த கோணேஸ்வரர் ஆலயத்தை மீண்டும் புனரமைக்க பக்தர்கள் ஏற்பாடு செய்தார்கள். அப்போது ஆலயத்தின் அருகில் இருந்த கிணறு ஒன்றை தோண்டிக் கொண்டு இருந்தபோது அங்கு புதைத்து வைக்கப்பட்டு இருந்த சந்திரசேகரர் என்ற பெயருடன் இருந்திருந்த சிவபெருமான், மாதுமை அம்மன் எனும் பெயரில் பார்வதி, விநாயகர் போன்ற கடவுட்களின் சிலைகள் கிடைத்தனவாம். அவை இன்றுள்ள கோணேஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளனவாம். அதற்கு முன்னர் 1944ம் ஆண்டு திருகோணமலைக் கோட்டையினுள்ளே நீர்த்தேக்கம் ஒன்று அமைப்பதற்கு முயற்ச்சிகள் மேற்கொண்ட போது விஷ்ணு மகாலட்ஷ்மி போன்ற கடவுட்களின் சிலைகளும் கிடைத்தனவாம். மீளும் சில சிலைகள் இன்னும் சில இடங்களில் கிடைத்தன. அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து, 1952 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட திருகோணேஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஆனால் ஆலயப் பணிகள் அனைத்தும் 1963 ஆம் ஆண்டில்தான் முடிவடைய அந்த ஆலயத்தின் கும்பாபிஷேகமும் நல்ல முறையில் நடந்து முடிந்தன.








































