Friday, 11 March 2016

பங்குனி

பங்குநீ நம் வாழ்வின் பாங்கும் நீயே,
ஆங்குநீ ஏற்றிய ஆன்ம தீபத் தீயே!
பொங்குவார் சடையெம் பிரானின்
பூங்கழல் போற்றுதும் போற்றி போற்றி.


குடியிருந்த கோவிலுக்கு நாம் 
மடியமர்ந்த மாளிகைக்கு தாய்
வடிவிருந்த தெயவத்துக்கு நாம் 
அடிபணியும் நாள் இது தான்.

அன்னையர் தினம் என்று இந்த
அகிலம் கொண்டாடும் இன்று
அன்னையின் மனம் என்றும் தன்
பிள்ளையைக் கொண்டாடும்.




என் அன்னையாய் இருந்த காலம் 
உன் அருமையை உணர்ந்ததில்லை 
என் தெய்வமாய் உயர்ந்த போது
உன் அன்பை நான் மறந்ததில்லை. - ரமணா(17+)

When you were my Mother
I did not appreciate You
When you became a God
I never forget your Love. - Ramana(17+)


பாசம் என்னும் கயிறு கட்டி
ஆசை என்னும் தொட்டிலிட்டு
நேசம் என்னும் மலர்கள் தூவி
நெஞ்சத்தால் கொஞ்சும் அன்னை
வாசம் நாம் மறந்த தில்லை
வாழும் நாம் அவரின் பிள்ளை
தேசந்தான் பிரிந்த போதும் 
கேசந்தான் நரை விழுந்தும்
வேசந்தான் முதுமை வந்தும் 
பாசந்தான் குறைந்து போமோ!



சுவாமிஜியின் 25வது குரு பூஜையை முன்னிட்டு நடைபெறவுள்ள திருச்சுற்றுலா 09/03/16அன்று நடைபெறும்.



எங்களுடைய இருபத்தைந்து வருட குரு பூஜையில் இருபதுக்கும் மேற்பட்ட பூஜையை நடாத்திய பெருமை சச்சிதானந்த ஐயாவையே சாரும். இவர் சிவப்பழமாக திகழ்ந்த இராமலிங்க குருக்களின் பூட்டனும், நானறிந்த பூரணக்குருக்கள் அவர்களின் பேரனும், எந்தையாருடன் செல்லும் போதெல்லாம் என் வாக்கு வனமையை சிலாகித்துப் பேசும் சுப்பிரமணிய குருக்களின் இரண்டாவது புத்திரனுமாவார். இவருடைய பெரியதகப்பனார் தியாகராஜ குருக்கள் அவர்களே எனக்கு ஏடு தொடக்கி வைத்து குருவுக்கு மிஞ்சிய சிஷ்யனாக வருவாய் என்று அருட் கடாட்சமும் தந்தருளிய ஆசானும் ஆவார். அந்த ஆசி பெறக் காரணமான நிகழ்வை பிறிதொரு சந்தர்ப்பத்தில் கூறுகிறேன்.


Sri Thyagaraja Aradhana, the Festival of Carnatic Music, was held at Saraswathie Hall in Bambalapitiya. A group of musicians participated. The festival was organized by the Indian Cultural Centre in collaboration with the Hindu Educational Society and Express Newspapers (Pvt) Ltd.


சுவாமி கெங்காதரானந்தாஜி அவர்களின் குருபூசை வைபவம் கொழும்பு இராமகிருஷ்ண மிஸன் மண்டபத்தில் இன்று மாலை 5மணியளவில் ஆரம்பமாகியது. அப்போது வரவேற்புரை நிகழ்த்திய செல்வன் பிரச்சோதயன் திலகநாதன்.


நன்றி உரை வழங்கிய தக்ஷிதாயன் சுந்தரமோகன்.


கட்டிலில் படுத்திருந்து
ஐபாடை கையில் வைத்து
தட்டெழுத்தில் தட்டித் தட்டி
எழுதியதை பிறர்க்கு காட்டி
அவர் போடும் விருப்புகளை
ஆர்வமாய் புரட்டிப் பார்த்து 
பட்டுவிடும் சுகம் இருக்கே
பரம சுகம் பரம சுகம்.

நாளெல்லாம் உழைத்துப் பின்
உடலெல்லாம் களைத்து வந்து
போடலாம் உடலைக் கொஞ்சம் 
கட்டிலில் என்ற காலம் 
கரையேறி போயே போச்சு 
வாழ்வெல்லாம் படுத்திருந்து 
வகை வகையாய் சிந்திப்பதும்
பரம சுகம் பரம சுகம்.

கையெழுத்து பத்திரிகை
கனமான புத்தகத்தில் 
பையப் பைய எழுதியதும்
பழங் கதையாய் போனதுவே
மெய்வருத்தக் கூலிதரும்
என்றசொல் பொய்த்திடாமல்
அந்தெழுத்தினால் வந்த புகழ் 
பரம சுகம் பரம சுகம்.

இருக்கையறை இருக்கைகளில் 
போயிருக்க இஷ்டமில்லை
படுக்கையறை விட்டகலப்
பஞ்சியாய் இருக்கிறது
எஞ்சிய வாழ்வெல்லாம் 
ஏக்கங்கள் இல்லாமல் 
கொஞ்சு தமிழ் படி(தி)த்தல்
பரம சுகம் பரம சுகம். - ஜோதி.


பொற் தாலியோடு எல்லாம் போம்...

தாயோடு அறுசுவை போம், தந்தையோடு கல்வி போம்,
சேயோடு தான் பெற்ற செல்வம் போம்,உறவொடு வாழ்வு 
உற்றார் உடன் போம், உடன் பிறப்பால் தோள்வலி போம்
பொற்றாலியோடு எவையும் போம்.
என் தாயாரின் இழப்பின் பின்னர் எனது தந்தை சொன்ன 
பாடலின் அர்த்தமும் வலியும் இன்று எனக்கும் புரிகிறது.


திருகோணமலையில் நடைபெற்ற சுவாமிஜியின் 25வது குருபூஜை ஊர்வலத்தில் எடுக்கப்பட்ட படங்கள்.





நிலையாத தெல்லாம் நிலையான தென்ற
நிலையான மனித நிலையால் 
நிலையான தொன்றை நிலையாக பற்ற
நிலையில்லா மனிதன் நிலையே.

நிறையாத தெல்லாம் நிறைவாக வெல்ல
நிறையாத செயல்கள் நிறைந்து
நிறைவான ஒன்றை நிறைவாக வென்று
நிறைவாகி நிற்ப தென்றோ.

மறையோதும் ஒன்றை மனங்கொள்ள வேண்டாம் 
மறைவாக மறைந்து போகும் 
மறைவேதும் இல்லா மனங்கொண்டு வாழ்ந்தால் 
மறையாத மறைகள் தோன்றும்.

அலைமோதும் மனதில் ஆசைகள் அடங்க
அலையாத மனமங்கு தோன்றும் 
அலையேதும் இல்லா ஆசைகள் இல்லா
அலைவீசும் அருட் சோதி ஆனேன்.


வெங்கட் ல்லிதா தம்பதியினர். சுவாமிஜியின் அன்பர்கள். லண்டனிலிருந்து குருபூஜையில் பங்குகொள்ள திருகோணமலை சென்றவர்களை அக்காச்சி அத்தான் விருந்தோம்பி வரவேற்றனர்.


தியான மண்டபம் விமலநாதன் தம்பதியினரால் செங்கம்பளம் விரித்து செப்பனிட்டு குருபூஜை தினத்தன்று திறந்து வைக்கப்பட்டது.








குருபூஜை போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு தலைவர் டாக்டர் இராமச்சந்திரன் அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டன.




பிரம்ம முராரியர் போற்றிடும் அன்னை
சிறிதும் கலங்கம் இல்லா சிவ அன்னை
பிறவியின் துயரை போக்கிடும் அன்னை
நானும் வணங்கும் திருமலை அன்னை.

தேவரும் முனிவரும் போற்றிடும் அன்னை
காமனை ஏவிய கருணா அன்னை
ராவணன் உள்ளம் விளங்கிடும் அன்னை
நானும் வணங்கும் திருமலை அன்னை.

வாசமனத்தையூம் பூசிய அன்னை
வளர் அறிவாகிய பூரண அன்னை
சித்த சுராசுரர் போற்றிடும் அன்னை
நானும் வணங்கும் திருமலை அன்னை.

பொன்மணிசூடி சுடர்ந்திடும் அன்னை
தன்னிடை நாகம் அணிந்திடும் அன்னை
தக்ஷனின் யாகம் வீழ்த்திய அன்னை
நானும் வணங்கும் திருமலை அன்னை.

குங்குமம் சந்தனம் பூசிய அன்னை 
பங்கய மாலையை சூடிய அன்னை
தொங்கிய வினைகளை போக்கிடும் அன்னை
நானும் வணங்கும் திருமலை அன்னை.

தேவர் கணங்களின் அர்சனை அன்னை
தேடிடும் பக்தியில் ஊறிடும் அன்னை
சூரியன் கோடி சுடர் விடும் அன்னை
நானும் வணங்கும் திருமலை அன்னை.

எட்டு திசைகளின் எல்லையில் அன்னை
எல்லா மாகிய காரண அன்னை
எட்டு தரித்திரம் நீக்கிடும் அன்னை
நானும் வணங்கும் திருமலை அன்னை.

தேவரின் உருவின் பூசைக்குள் அன்னை
தேவ வன மலரை ஏற்றிடும் அன்னை
பரமனை அதனாய் பரவிய அன்னை
நானும் வணங்கும் திருமலை அன்னை.

அன்னையாஷட்டக மிதை தினமும்
உன் சன்னதியில் சொல்வார்
சிவலோக காட்சியுடன்
உன் அருளும் கொள்வார்.


அம்மையப்பன் ஆகிநின்ற உண்மை அப்பன்.
சந்திரசேகர முகுர்த்தம்.




இரதோற்சவம்

தேரில் வாராளாம் தேவி தெருவில் வாராளாம் 
பாரில் உள்ளோர் பாவம்போக்க பவனி வாராளாம் 
கந்தனோடு கணபதியைக் கூட்டி வாராளாம் 
வந்தவர்க்கு வாரிவரம் வழங்க வாராளாம்.




தீர்த்தோற்சவம்.

பக்த கோடி
பக்தி கூடி
பக்தி வெள்ளம் ஓடுதே
பக்தி வெள்ளம் 
பாயந்து வந்து
கடற்கரையில் கூடுதே
சக்தி காளி
சிம்ம மேறி
வங்க கடல் போகுதே
சாந்தி சாந்தி
சாந்தி என்று
சமுத்திரமும் கூவுதே.


பூங்கா வனங் கண்டாள் பூவரசி எங்கள் 
தூங்கா மனம் வாழும் மாதரசி
தாங்காய் எமை நாளும் தாயாகி வளம் 
ஓங்கு திருமலையின் மீனாட்சி.



வாசுதேவ பராவேதா வாசுதேவ பராமகா
வாசுதேவ பராயோகா வாசுதேவ பராக்ரியா
வாசுதேவ பரம் ஞானம் வாசுதேவ பரம் தபா
வாசுதேவ பரோ தர்மா வாசுதேவ பராகதி

ஶ்ரீமத் பாகவதத்தில் மொத்தம் பதினெட்டாயிரம்
சுலோகங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது
மேலே சொல்லப்பட்டது. இதனை சுகப்பிரமர்
உரைத்துள்ளார். வாசுதேவ என்றால் வஸுதேவரது
மகன் என்றும் எல்லோர் மனதிலும் வாசம் செய்பவர் 
என்றும் பொருள்.
வாசுதேவரே வேதத்தின் மூலப் பொருள், வாசுதேவரை
திருப்திப்படுத்துவதே யாகத்தின் முழுப்பயன், வாசுதேவரை
அடைவதே அனைத்து யோகங்களின் இறுதி முடிவு, 
வாசுதேவரே எல்லா செயல்களிலும் உண்மையான 
பயனை கொடுப்பவர், வாசுதேவரே அனைத்துக்கும் 
மூலம் என்றறிவதே உயர்ந்த ஞானம், வாசுதேவருடைய
அன்பிற்கு பாத்திரமாவதே உயர்ந்த தவம், வாசுதேவருக்கு
பக்தி செய்வதே உயர்ந்த தர்மமாகும், வாசுதேவரே
எமக்கெல்லாம் பூரண கதி - அடைக்கலம்.

No comments:

Post a Comment