Sunday, 27 December 2015

இவளோடு வாழ்ந்த கால நினைவோடு...

இவளோடு வாழ்ந்த கால
நினைவோடு வாழுகின்றேன்
எவரோடும் கோபம் இல்லை
நிறைவோடு வாழுகின்றேன்.

வருடங்கள் வந்து போகும் 
வாழ்க்கையும் தேய்ந்து போகும் 
பருவங்கள் மாறிப் போகும் 
முதுமையும் வந்து சேரும்.

இளமையின் உழைப்பை எல்லாம் 
ஈன்றவர்க் கிறைத்து வாழும்
கொடுப்பினை இல்லை என்று
கொடுப்பதை நிறுத்த வில்லை.

கொடுத்ததை எடுத்துக் கொண்டு
எடுத்ததை நன்றி கொன்று
அடுத்ததைப் பார்க்கும் வாழ்வில் 
யாரைநான் குற்றம் சொல்வேன்.

தடுத்ததைத் திருத்தும் பெற்றார் 
கடமையும் திருத்தம் பெற்றால் 
எடுத்தவர் எண்ணம் மாறும்
கொடுத்தவர் உள்ளந் தேறும்.

விடுகதை கவிதை சொன்னேன் 
விளக்கமாய் சொல்ல வந்தால் 
என்கதை முடிந்து போகும் 
என்பதை எண்ணிப் பார்த்தேன்.

இவளோடு வாழ்ந்த கால
நினைவோடு வாழும் என்னை
உயிரோடு வதைத்து வாழும்
உறவுகள் என்றும் வாழ்க.

No comments:

Post a Comment